செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்
செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்படம்: நன்றி- ஆர்.செந்தில்குமார்

உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்கவேண்டும்- செல்வப்பெருந்தகை

”உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். மேலும், இனியாவது அவர் தனது அலங்காரப் பதவியின் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.” என்று சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள் குறித்து ஆளுநர் இரவியின் பேச்சுக்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், செல்வப்பெருந்தகையும் கண்டித்துள்ளார். அவரின் அறிக்கை:

”கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர் மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார். அவரை மாற்ற வேண்டுமென தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பா.ஜ.வின் பார்வையிலான வரலாற்றை அவர் பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர், 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தான் காரணம் என்றும் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை என்றும் நாட்டின் தேசத் தந்தை நேதாஜி என்றும் பேசியுள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் செய்த தியாகத்தை இதன்மூலம் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டினருக்கும் பெருமை சேர்த்த பல வெளிநாட்டு அறிஞர்களை பழித்துக் கொண்டிருந்த ஆளுநர் தற்போது நம் நாட்டின் தேசப்பிதாவை காயப்படுத்த தொடங்கியிருக்கிறார். அவர் மீதே மக்கள் கவனம் இருக்கவேண்டுமென்று ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குள்ளாகும் பொய் செய்திகளை பரப்பி வருகிறார்.

ஆளுநர், அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. அவர் வாங்கித் தரும் கெட்டபெயர்களும் பா.ஜ.க. கணக்கில்தான் போய்ச் சேர்ந்து கொண்டுதான் இருக்கும்.” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com