முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கூறப்படும் திருச்செந்தூர் கோயில் கடலோரத்தில் இன்று காலையில் திடீரென கடல் உள்வாங்கியது.
வழக்கமாக, அமாவாசை, பவுர்ணமி நாள்களில் பூமியின் இயக்க விதிப்படி கடல் அலைகள் அளவுக்கு அதிகமாகப் பொங்குவதைப் பார்க்கமுடியும். கடல் உள்வாங்கவும் செய்யும்.
ஆனால் இன்று சம்பந்தமே இல்லாமல் திடீரென கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசனத்துக்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் இதைக் கண்டு திகைப்படைந்தனர்.
கடலோரத்தில் பச்சைப் பசேல் என தண்ணீருக்குள் புல்தரைபோல அந்த இடம் காட்சியளித்தது.
மேலும், பல சாமி சிலைகளும் அந்தப் பகுதியில் தென்பட்டன. முருகன், நந்தி சிலைகள் உடைந்து சேதாரத்துடனும் மணலில் புதைந்தபடியும் இருந்தன.
பலரும் உற்சாக மிகுதியில் உள்வாங்கிய கடல் பரப்புக்குள் சென்று, அங்கிருந்த சிப்பிகளையும் வேறு கடல் பொருட்களையும் சேகரிப்பதில் இறங்கினர்.
உள்வாங்கிய கடல் திடீரென அலைகளுடன் கரைக்கு வருகையில் உயிராபத்து ஆகிவிடும் என்பதை அங்கிருந்த மற்றவர்கள் சொன்னபோதும், அவர்கள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.