ஊழலை ஆதாரத்துடன் நிரூபித்தது உண்டா?- மு.க.ஸ்டாலின் கேள்வி

ஊழலை ஆதாரத்துடன் நிரூபித்தது உண்டா?- மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் எதையாவது ஆதாரத்துடன் நிரூபித்தீர்களா என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

நிகழ்வில் அவர் பேசியது:

“ இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தான் எழுதப்பட வேண்டும்! அதேபோல், வளர்ச்சியும், தெற்கில் தமிழ்நாட்டில் தொடங்கி தான் எழுதப்பட வேண்டும்!

இந்த க்ரோத் ஹிஸ்டரியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்களை எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்தான்!

அதில் முதல் குற்றச்சாட்டு, அரசியல் வாரிசு! இதற்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும், அவர்கள் மக்களுக்கு முன்னால் நின்று, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு பெற்றால் மட்டும்தான், வெற்றி பெற முடியும். எனவே இது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு!

அடுத்து சொல்வது என்ன? ஊழல்! இதுவரைக்கும் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை யாராவது ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்களா? கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் பா.ஜ.க.-விடம் கேட்பது என்வென்றால், உங்கள் கூட இருக்கும் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அதிலும், உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக. நீங்கள் கூட்டணியில் இல்லாத சமயத்தில், அவர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகளை சொன்னீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்கள் எல்லாம் வெளுத்துவிட்டீர்களா?  இதுதான் என்னுடைய கேள்வி.

அடுத்து, இந்து விரோத கட்சி என்று பேசுவார்கள். ஆனால், உண்மை என்ன? இந்தியாவிலேயே, பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு, நாங்கள் ஆட்சி அமைத்து இந்த ஆயிரத்து 730 நாட்களில், நான்காயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம்! உண்மையான பக்தர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்! இப்படி, பாஜக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் ஆதாரத்தோடு பதில் சொல்லிவிட்டேன். ஆனால், அவர்களோ, நாங்கள் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை! இப்போது உங்கள் முன்பாகவும் கேட்கிறேன்… இந்தி திணிப்பை ஏற்காததால் கொடுக்காமல் இருக்கும் கல்வி நிதி எப்போது வரும்?

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை கூட முறையாக தரவில்லையே ஏன்?

கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது அனுமதி வரும்?

கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? - இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கிறது. இது எதற்குமே அவர்களிடம் இருந்து பதில் வராது!

ஏனென்றால், இது எல்லாமே, பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு செய்திருக்கக்கூடிய துரோக லிஸ்ட்! அவர்கள் ஒவ்வொரு முறை இங்கு வரும்போது, அந்த லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்கிறது! நாங்கள் எதற்காக இவ்வளவையும் பேசுகிறோம் என்றால், நம்முடைய இந்திய நாடு ஒற்றுமையாக, வலிமையாக இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவையும் சொல்கிறோம்.

நாங்கள் நாட்டின் யூனிட்டிக்காகப் பேசுகிறோம். பா.ஜ.க.வோ யூனிஃபார்மிட்டி பேசி, பாசிச அரசியல் செய்கிறது! மாநிலங்கள்தான், நாட்டின் அடித்தளம்! இந்தியா என்பது, “யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்”. இதை பா.ஜ.க. உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு என்று நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தையும், இந்த நாட்டில் வாழும் மக்களையும் காப்பாற்றுவதுதான் உண்மையான நாட்டுப்பற்று என்று நாங்கள் அழுத்தமாக சொல்கிறோம்!

N.D.A. என்கிற பெயரில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. உருவாக்கியிருக்கும் கூட்டணிக்கு என்று எந்தக் கொள்கையும் கிடையாது! அது, முழுக்க முழுக்க கட்டாயத்தினாலும், ஒரு சிலரின்  சுயநலத்திற்காகவும் கூடியுள்ள துரோகக் கூட்டணி அது!

நான் கேட்கிறேன்… நீட் தேர்வு விலக்குப் பற்றி அக்கறையுடன் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சியினர், அவர்களின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.-விடம் அதை வலியுறுத்த ஏன் தயங்குகிறார்கள்? அஞ்சி நடுங்குகிறார்கள்?

தமிழ்நாட்டு மீது பா.ஜ.க. வலுக்கட்டாயமாக திணித்திருக்கும் திட்டங்கள் பற்றி குரல் எழுப்ப திராணியில்லாமல் இருப்பவர்கள், நெஞ்சை நிமிர்த்தி எப்படி மக்களுக்காக கேள்வி எழுப்புவார்கள்?

தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காப்பதற்கு எப்படி தலைநிமிர்ந்து பேசுவார்கள்? அதனால்தான், நடைபெற இருக்கின்ற தேர்தல் தமிழ்நாடு வெர்சஸ் N.D.A. என்று அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!

வழக்குகளால் மிரட்டப்பட்டு, முழுக்க முழுக்க சுயநலத்தோடு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய N.D.A. கூட்டணியை, அடுத்தடுத்த துரோகங்களுக்கான அச்சாரமாக தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்!

நான் உறுதியாக சொல்கிறேன்… N.D.A.-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்! நான் மக்களை நம்புகின்றவன்! பேரறிஞர் அண்ணா சொன்னது போல, மக்கள் கூடவே வாழ்பவன்! இன்னும் பல திட்டங்களை உருவாக்கி, இந்தியாவில் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலம் என்று தொடர்ந்து பெருமையுடன் சொல்ல நான் உழைப்பேன்! அதற்காகத்தான், “உங்க கனவ சொல்லுங்க” என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லோருடைய குரலையும் கேட்க தொடங்கியிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியிலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் பேச இருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளையும் நான் நிச்சயம் முழுமையாக கேட்பேன். அதில் அவதூறுகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆக்கப்பூர்வமானதை கவனத்தில் எடுத்துகொண்டு, திராவிட மாடல் 2.0 அரசு அமைய நிச்சயம் பாடுபடுவேன்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com