பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தன் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என தலைவர் அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இராமதாஸ் இதைக் கூறினார்.
“என்னுடைய இனிசியலை மட்டும் போட்டுக்கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக்கூடாது.” என்றவர், இராமன் வனவாசம் போனபோது தந்தை சொன்னதைக் கேட்டு அவரின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை மலர்போல இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
”பதினாலு வருசம் வனவாசம். ஆனாலும் நாம் சொல்வது என்ன... செயல் தலைவராக இருந்து மக்களைச் சென்று பாருங்கள். ஊர் ஊராகப் போய் மக்களைப் புரிந்துகொள்ளுங்கள்.” என்றுதான் சொல்வதாகவும் இராமதாஸ் அழுத்தமாகக் கூறினார்.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராமதாசுக்கு வயதாகிவிட்டதால் குழந்தைபோல ஆகிவிட்டார் என அன்புமணி கூறியதற்குப் பதிலடியாக, “ இந்த ஐந்து வயதுக் குழந்தைதான் மூன்று ஆண்டுகளுக்குமுன் உன்னைத் தலைவராக ஆக்கியது.” என்று கிண்டலாகக் கூறினார்.