ஏஐ வீடியோ... விஜய் குதிரை பேரம் - டிடிவி தினகரன் சொல்வதன் பின்னணி!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

தூய சக்தி எனப் பேசிவந்த த.வெ.க. தலைவர் விஜய், குதிரை பேரம் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதற்காக நேற்று மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்தார், அக்கட்சியின் தலைவர் விஜய். அப்போது, அவர் தன்னை ஆதரிக்கும் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர் பட்டியலையும் அளித்துள்ளார். அதில் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வின் ஒரே எம்.எல்.ஏ. மன்னார்குடி காமராஜ் பெயரும் இடம்பெற்றிருந்தது, அதிர்வலைகளை உருவாக்கியது. 

ஏனென்றால், இடதுசாரிகள் ஆதரவைக் கேட்டு கடிதம் பெற்றுள்ள விஜய், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க.வை எப்படிச் சேர்த்துக்கொண்டார் என்பது பெரிய கேள்வியாக எழுந்தது. 

இது ஒரு புறம் இருக்க, தூய்மையான அரசியல் எனப் பேசிவரும் விஜய், இப்படி குதிரை பேரத்தில் ஈடுபடலாமா? மோசடி செய்யலாமா என வரிசையாகக் கேள்விகளை தினகரன் அடுக்கியுள்ளார். 

சற்றுமுன்னர் சென்னை, அடையாறு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன், “உண்மையில் எங்கள் எம்.எல்.ஏ. காமராஜிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து வாங்கியிருந்தேன். அதில் என்னுடைய கையெழுத்தையும் போட்டு கவர்னரிடம் கொடுப்பதற்காக தயார்செய்திருந்தோம். இது நடந்தது மாலை 6 மணியளவில் இருக்கும். என்னுடைய உதவியாளர்தான் அவரிடம் கையெழுத்து வாங்கியிருந்தார். புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த காமராஜ் பிறகு ஊருக்குப் போவதாக என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு செய்தியில் பார்த்தால் விஜய்க்கு நாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் காமராஜ் கடிதம் தந்ததாகவும் சொல்லப்பட்டது. உடனே அவரைத் தொடர்புகொள்ள முயன்றோம். முடியவில்லை. உடனே ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு, அவரிடம் எங்கள் கடிதத்தைக் கொடுத்தோம். பிறகு காமராஜ் என்னுடைய வழக்கறிஞர் மூலம் தொடர்புக்கு வந்தார். தான் அப்படி கடிதம் எதுவும் தரவில்லை என்று கூறினார். அவரும் ஆளுநரைச் சந்தித்து நிலைமையைச் சொன்னார்.” என்று கூறினார். 

மேலும், காமராஜ் கையெழுத்திட்டுத் தருவதாக த.வெ.க. தரப்பில் வெளியிட்ட வீடியோ பற்றிய சந்தேகத்தையும் தினகரன் தெரிவித்துள்ளார். 

அது ஏஐயாகக் கூட இருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இந்த வீடியோ மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டதாகவும் தினகரன் தெரிவித்தார். 

இந்த நிலையில், த.வெ.க. தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

logo
Andhimazhai
www.andhimazhai.com