ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளைச் சிதைப்பதுதான் விஜய் ஆட்சியின் சாதனையா?

panrutti velmurugan
பண்ருட்டி வேல்முருகன்
Published on: 

தமிழ்நாட்டில் 29 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடப்பிரிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன; குறிப்பாக, 20 அரசுக் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததாகக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கவலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“ மாநிலத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டில் மொத்தம் 1,26,959 இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள் உள்ள நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நிலவரப்படி 83,276 இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. இது 65.59 விழுக்காடு மட்டுமே. முந்தைய கல்வியாண்டின் இதே காலகட்டத்தில் 78.8 விழுக்காடு இடங்கள் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர் சேர்க்கை சரிவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அரசுக் கல்லூரிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய நிர்வாகம், பாடப்பிரிவுகளையே முழுமையாக நீக்குவது எத்தகைய அணுகுமுறை?

போதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படாமை, ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளின் பற்றாக்குறை, சமகால வேலைவாய்ப்புக்கு ஏற்ற புதிய பாடத்திட்டங்கள் இல்லாமை, தனியார் கல்லூரிகளுடன் போட்டியிட முடியாத கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா?

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, இருக்கும் கல்வி வாய்ப்புகளையும் சுருக்குவதுதான் சமூகநீதியா?

மாணவர்கள் வரவில்லை என்றால் அதற்கான காரணத்தைக் களைவதற்குப் பதிலாக, பாடப்பிரிவுகளைக் குறைப்பது எந்த வகையில் நியாயம்?

கணிதம், இயற்பியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடங்கள்தான் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளங்கள். அத்தகைய பாடப்பிரிவுகளையே அழித்துவிட்டு, எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் என்று பேசுவது முரண்பாடானது அல்லவா?

எனவே, இரத்து செய்யப்பட்ட மற்றும் கைவிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.