ஒரே பேராசிரியர் 11 கல்லூரிகளில்... இப்படியுமா நடக்கும்? வெடிக்கும் விவகாரம்!

நெல்லை அறப்போர் இயக்கப் போராட்டம்
நெல்லை அறப்போர் இயக்கப் போராட்டம்
Published on

ஒரே ஒரு பேராசிரியர் ஒரே சமயத்தில் 11 பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றியதாக முறைகேடு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

மாநில அளவில் அரசாங்கத்தின் ஒரே பொறியியல் இணைவுப் பல்கலைக்கழகமாக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மைய, மாநில கல்வி மானிய அமைப்புகளின் விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இதன்படி, அனைத்து கல்லூரிகளும் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்தும், தேசிய தரமதிப்பீட்டுக்கு உகந்தவையாக உள்ளனவா என்பதைத் தெரிவிக்கவும் பல்கலைக்கழகத்தில் சிஏஐ என ஆய்வுத் துறையும் உண்டு.

வேலியே பயிரை மேய்வதைப் போல இந்தக் குழுவில் உள்ள அதிகாரிகள், பேராசிரியர்களும்கூட சில முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அறப்போர் இயக்கம் அமைப்பு இதை ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளியிட்டுவந்தது. முன்னைய, தற்போதைய ஆட்சிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

இந்தப் பின்னணியில் ஊழல் தடுப்பு காவல்துறை திடீரென அண்ணா பல்கலை.யைச் சேர்ந்த 12 பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றியதாக முறைகேடு செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதில், மாரிச்சாமி என்ற ஒருவர் 11 கல்லூரிகளில் ஒரே சமயத்தில் பணியாற்றுவதாக ஆவணங்களில் பதிவுசெய்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- பெரம்பலூர், எம்ஆர்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி- கடலூர், ஏஆர்ஜே காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி-திருவாரூர், ஏகேடி மெமோரியல் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி- கள்ளக்குறிச்சி, ஏஞ்சல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி- திருப்பூர், பாத்திமா மைக்கேல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி- மதுரை, கதிர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்- கோயம்புத்தூர், மீனாட்சி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்- சென்னை, ரங்கநாயகி வரதராஜ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்- விருதுநகர், ரேஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்- காஞ்சிபுரம், ஸ்ரீ முத்துக்குமரன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி- காஞ்சிபுரம் ஆகிய கல்லூரிகள் இவரைப் பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளன என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் கோவை கதிர் கல்லூரி மீது மட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குறைகூறியுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மூன்று கல்லூரிகள் அரசியல் கட்சி தொடர்புடையவை என்றும் அதனால்தான் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படுகிறதா என்றும் அவ்வமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள ஊழல் தடுப்புத் துறை, அடுத்தகட்ட செயல்முறைகளில் இறங்கியுள்ளது. ஆனால், இந்தக் குறிப்பான பிரச்னை குறித்து தகவல் எதையும் வெளியிடவில்லை. அரசுத் தரப்பிலும் ஆளுங்கட்சித் தரப்பிலும்கூட விளக்கம் ஏதும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com