கசக்கும் மாம்பழ விவசாயிகள் வாழ்க்கை... வேல்முருகன் ஆதங்கம்!

கசக்கும் மாம்பழ விவசாயிகளின் வாழ்க்கை
கசக்கும் மாம்பழ விவசாயிகளின் வாழ்க்கை
Published on

மாம்பழம் இனிக்கிறது; ஆனால் மாம்பழ விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் கசப்பது ஏன் என்று த.வா.க.தலைவர் வேல்முருகன் கேட்டுள்ளார். 

”தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இலட்சக்கணக்கானக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாம்பழச் சாகுபடி விளங்குகிறது. ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து விளைவிக்கும் இந்தத் தோட்டக்கலைப் பயிருக்கு, அறுவடை நேரத்தில் நியாயமான விலை கூட உறுதியாக இல்லாத நிலை நீடிப்பது வேதனைக்குரியது.” என அறிக்கை ஒன்றில் அவர் ஆதங்கப்பட்டுள்ளார். 

”விதைப்பதில் இருந்து அறுவடை வரை ஒவ்வொரு நாளும் செலவு, உழைப்பு, காலநிலை ஆபத்து எனப் பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தி செய்யும் விவசாயியின் வருமானம், சில இடைத்தரகர்களின் மனநிலையை பொறுத்து தீர்மானிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.

நெல், கோதுமை, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து வருகிறது. கரும்புக்கு மாநில அரசுகள் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையும் உள்ளது. 

விவசாயியின் உழைப்பை பாதுகாக்கும் இத்தகைய கொள்கை இருக்கும் போது, தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மாம்பழமும், மாங்காயும் மட்டும் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே விடப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

மாம்பழ உற்பத்தியில் நாடு முழுவதும் முன்னணி இடத்தைப் பெற்றுள்ள தமிழகத்தில், விளைபொருளின் மதிப்பைச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு விட்டுவிடாமல், மாம்பழம் மற்றும் மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு அறிவிக்க வேண்டும். அதோடு, அரசு நேரடி கொள்முதல் மையங்கள், குளிர்பதனக் கிடங்குகள், பழக்கூழ் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மையங்கள், ஏற்றுமதி வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.

விவசாயி கேட்பது, உழைப்புக்கான நியாயமான வருமானம். அவர் எதிர்பார்ப்பது கருணையல்ல. சட்டப்பூர்வமான பாதுகாப்பு. இதை உறுதி செய்வதே நல்லாட்சியின் அடையாளமாகும்.

எனவே தமிழ்நாடு அரசு, மாம்பழ விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி, மாம்பழங்களுக்கும் மாங்காய்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிப்பதோடு, அரசின் நேரடி கொள்முதல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com