கனிம அகழ்வு அனுமதி- மாநில உரிமைகளுக்கு எதிரானது!

minerals mine
கனிம சுரங்கம்
Published on

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ள அனுமதி : ஒன்றிய அரசின் அறிவிப்பு மாநில அரசுகளின் உரிமைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இலித்தியம், கிராபைட், தாமிரம் கோபால்ட், நிக்கல், காலியம், மாலிப்தினம், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான கனிமங்களை 2023ஆம் ஆண்டு முக்கியக் கனிமங்கள் என வகைப்படுத்தி ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரிவு பி–ன் படி, தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான கனிமங்கள் அணுக் கனிமங்களாக வகைப்படுத்தியும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அக்கடிதத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை வாகனங்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டிக் கருவிகள் மற்றும் தொலைத் தொடர்புக் கருவிகளை உருவாக்க அரிய வகை கனிமங்கள் அதிகம் தேவைப்படுவதால் முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களை தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட திட்டங்களாகக் கருதி அவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் அறிக்கை ஒன்றில் விவரித்துள்ள பண்ருட்டி வேல்முருகன்,

”ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஒன்றிய அணுசக்தித் துறையானது சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், மூன்றாம் நிலை அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியம் எரிபொருளைக் கொண்டிருக்கும் மோனசைட் மற்றும் முதல் நிலை அணுமின் உற்பத்தியில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் யுரேனியம் காணப்படும் கடற்கரைத் தாது மணலை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

இக்கோரிக்கைகளைப் பரிசீலித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் கீழ் முக்கியக் கனிமங்களாகவும் அணுக் கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இனி இத்திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் நடைமுறையில் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படாது.

மேலும், அகழ்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் அறிவிப்பு என்பது, கனிமங்கள் மீதான மாநில அரசின் உரிமைக்கு எதிரானது; மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகும்.

குறிப்பிடப்பட்டுள்ள 24 வகையான கனிமங்களை ஏலம் விடும் உரிமையானது ஏற்கனவே ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. இதனால், கனிமத் தொகுதிகளை ஒன்றிய அரசே ஏலம் விடும்; அதில் மாநில அரசு தலையிட முடியாது, பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படாது; சுற்றுச்சூழல் அனுமதியினையும் ஒன்றிய அரசே வழங்கும்.  

கனிமங்களை அகந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் சுரங்க  நடைமுறை மற்றும் கடற்கரை தாது மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகள் மிகுந்த சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பணிகளாகும்.” என்றும் கூறியுள்ளார். 

”இப்பணிகளால் சுற்றுச்சூழல் நாசமாகும், கடலரிப்பு மேலும் தீவிரமடையும், வாழ்விடப் பாதிப்புகள் அதிகரிக்கும், கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்போது எழும் கதிரியக்க அபாயத்தால் நோய்கள் பல்கிப் பெருகும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், கார்னெட், ரூட்டைல், சிர்கான், லூக்கொக்சின், சிலிமனைட், இல்மனைட், மோனோசைட் போன்ற கனிம வளங்களை அள்ளித்தோண்டி விற்று தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்தன. ஆனால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர்.

கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம்,  கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.

இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகோரி ஏற்னெவே விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் 1.10.2024 அன்று இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இக்கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், தற்போது கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துவிட்டதால் இத்திட்டம் செயல்பட எவ்விதத் தடையுமில்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே, பருவநிலை மாற்றம் காரணமாக, உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதை அடுத்து, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக சொல்ல வேண்டுமானால், சமீப காலமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், இயற்கை பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை கண் கூடாக நாம் பார்த்து வருகிறோம்.

இத்தகைய சூழலில், இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டத்துக்குரியது. சுற்றுச்சூழலுக்கும், மாநிலங்களின் உரிமைக்கும் எதிரானது.

குறிப்பாக, இந்தியாவில் உள்ள அரிய வகை கனிமச் சுரங்கங்களை பெரு முதலாளிகளுக்கு தூக்கிக் கொடுப்பதற்காகவே, ஒன்றிய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த மோசமான திட்டத்திற்கு இடையூறாக மாநில அரசுகளோ, பொதுமக்களோ வந்துவிடக் கூடாதெனும் நோக்கத்தோடு, ஒன்றிய அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஜனநாயக அமைப்புகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி, புதிய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மோடி தலைமையிலான அரசின் தன்னிச்சையான அறிவிப்பு என்பது, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது; பாசிசத்தின் உச்சம்.” என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com