கன்னியாகுமரி உட்பட 13 புதிய நகராட்சிகள் உருவாக்கம்!

குமரி முனை திருவள்ளுவர் சிலை
குமரி முனை திருவள்ளுவர் சிலை
Published on

கன்னியாகுமரி உட்பட 13 பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவதற்காக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

”நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல்/மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.” என்றும் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்று, 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள், 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கியுள்ளது.

மேலும், 12.08.2024 அன்று மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்து உருவாக்க உத்தேசமுடிவை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத் தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ”பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும்,

திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம்  உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியை இணைக்கவும்,

பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும்,

கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உட்பட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும்,

29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.” என்று நகராட்சி  நிர்வாகம்  (ம) குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com