பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

கர்நாடகத்தில் ரூ.3,000, தமிழகத்திலோ 17 ஆண்டுகளாக ரூ.600தான்!- இராமதாஸ் விசனம்!

கர்நாடகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் 600ரூபாய்தான் 17 ஆண்டுகளாகத் தரப்படுகிறது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு விசனப்பட்டுள்ளார்.

”கருநாடக மாநிலத்தில் சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பட்டம் பெற்று 6 மாதங்களாகியும் வேலை பெறாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும், பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதமும் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்குடன் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் உதவி.” எனப் பாராட்டியுள்ள இராமதாசு, 

”படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு போட்டித் தேர்வுகளையும், குடிமைப் பணி தேர்வுகளையும் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதைப் புரிந்துகொண்டு, அவர்கள் போட்டித்தேர்வுகளை எழுதுவதற்காக செய்யும் செலவில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஈடுகட்டும் வகையில் பட்டம் பெற்றதிலிருந்து 6 மாதத்தில் தொடங்கி அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவ்வுதவியை கர்நாடக அரசு வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதே போல் மாற்றியமைக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசோ யாருக்கும் பயனற்ற வகையில், 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டம் பயனற்ற திட்டமாகும்.” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். 

”பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மாதம் ரூ.600 மட்டுமே, அதாவது கருநாடகத்தில் வழங்கப்படுவதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை. மாறாக பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, 12ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு ரூ.400 வழங்கப்படுகிறது.

கருநாடகத்தில் பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த பருவம் தான் போட்டித் தேர்வுகளை முழுவீச்சில் எழுதுவதற்கான காலகட்டம் ஆகும். அவர்கள் போட்டித்தேர்வுகளை எழுதவும், தயாராகவும் இந்த உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் பட்டப்படிப்பை முடித்து 5 ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததை நிரூபித்த பிறகுதான் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கவே முடியும். அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்போது அவர்கள் படிப்பை முடித்து குறைந்தது 8 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதற்குள்ளாக வேலையில்லாத இளைஞர்கள், போட்டித்தேர்வு எழுதும் ஆர்வத்தையும், மன உறுதியையும் இழந்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையால் எந்த வகையிலும் பயன் கிடைக்காது.

கருநாடகத்தில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 70 ஆயிரம் பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப் படுகிறது. இது விரைவில் ஒரு லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. இரு ஆண்டுகளுக்கு உதவித்தொகை என்பதால், அடுத்த ஆண்டில் புதிதாக பட்டம் பெற்ற மேலும் ஒரு லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் சேருவார்கள். அப்போது பயனாளிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயரும். ஆனால், தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி மொத்தமாகவே 55 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் 70 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு ஆகும்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குப் பிந்தைய 17ஆண்டுகளில் உதவித்தொகை உயர்த்தப்பட வில்லை. அப்போது அறிவிக்கப்பட்ட அதே ரூ.600 தான் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கூட பல்வேறு காரணங்களைக் காட்டி கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவி என்பது அவர்களின் உயர்வுக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவுவதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கருநாடகத்தில் இருப்பது போன்று இத்திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கும், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் தலா ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; அதன்மூலம் படித்த இளைஞர்களின் வாழ்வில் தமிழக அரசு ஒளி விளக்கேற்ற வேண்டும்.” என்றும் இராமதாசு தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com