கறிக்கோழி விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் நிலையில், முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி கூலியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விவசாயிகள் வளர்ப்புக்கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் காரணாக கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோழிப் பண்ணை தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் ‘1872 Indian Contract Act - ன் படி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்க்கிறார்கள். எனவே, இதில் அரசு தலையிட்டு முத்தரப்பு கூட்டம் நடத்திட முடியாது என கால்நடைத் துறை இயக்குனர் மாநில அரசு சார்பில் அறிவித்துள்ளார். இது தவறான அணுகுமுறையாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”தமிழ்நாட்டில் ஏற்கனவே முத்தரப்பு கூட்டம் நடைபெற்றதற்கு முன்னுதாரணம் உள்ளது. 21.09.2013-ல் தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை அமைச்சர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. வளர்ப்புக் கூலி, செப்டம்பர் 2013 முதல் 15 சதவிகிதமும், ஜனவரி 2014 முதல் மேலும் 5 சதவிகிதமும் உயர்த்தி 20 சதவிகிதம் என கூலி உயர்த்தப்பட்டது. எனவே, மாநில அரசு முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும், நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து வளர்ப்புக் கூலியை உயர்த்தவும், இத்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும் வேண்டும்.” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.