சென்னையில் அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் கடந்த 7ஆம் தேதி இயற்கைச் சூழலுடன் கூடிய அழகிய பெரிய பூங்கா, கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா எனும் பெயரில் திறந்துவைக்கப்பட்டது. அதைக் காண ஆர்வத்தோடு நூற்றுக்கணக்கானவர்கள் வந்துசென்ற நிலையில், சில நாள்களுக்கு முன் ரோப் கயிறில் சென்ற பெண்கள் அந்தரத்தில் மாட்டிக்கொண்டு, மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், பெரு மழை வரும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை இயக்குநர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவானது, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Orange and Red Alert) விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி, 15.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது.” என்று கூறப்பட்டுள்ளது.