
சென்னையில் இன்று மாலையில் நடைபெற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மான விவரம்:
“ மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று தி.மு.க.வின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.