ஜெர்மனியை அடுத்து பிரிட்டனில் பயணம்செய்துவரும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இலண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் ஆசியவியல் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்தார். திராவிட இயக்கக் கருத்தரங்கிலும் அவர் பேசினார்.
அங்கு அண்ணல் அம்பேத்கர் வசித்த வீட்டை அவர் பார்வையிட்டார். இதுகுறித்து தன் சமூக ஊடகப் பக்கத்தில், “ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இலண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்பொழுது, தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, இலண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார். குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது.
இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்! ஜெய் பீம்!” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இலண்டன் ஹைகேட் பகுதியில் கம்யூனிசத் தத்துவவாதி காரல் மார்க்சின் கல்லறைக்கும் முதலமைச்சர் சென்றார். இதுகுறித்து “உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்!” என்று அவர் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.