கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்துசமயத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் கடந்த 1ஆம் தேதியன்று கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது; அதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுமா என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. உறுதியாக நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தொடர்ந்து சென்னையில் இன்று ஊடகத்தினரைச் சந்தித்த அவர், இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றார்.
மேலும், கோயிலிலிருந்து காலை பரணி தீபத்தைக் காண 3ஆயிரம் பேருக்கும் மாலையில் மகா தீபத்தைக் காண 11,600 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, மலைச்சரிவின் தாக்கத்தை அறிய அண்ணா பல்கலை. பேராசிரியர் பிரேமலதா தலைமையில் 8 பேர் ஆய்வுக் குழு அங்கு சென்று ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன்படியே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.