காவிரி டெல்டாவை வறண்ட பகுதியாக அறிவிக்க 28இல் போராட்டம்!

மு.வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு
மு.வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு
Published on

காவிரிப் பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திட வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

“டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 28.08.2026 அன்று நடைபெற உள்ளது.

வனத்திலிருந்து பழங்குடியினரை வெளியேற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு மேகமலையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. வன உரிமைசட்டப்படி வன உரிமைகளை அங்கீகரிக்கும் பணிகள் முடியும் வரை வனத்திலிருந்து யாரையும் வெளியேற்ற மாட்டோம் என்ற நிலையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

வந்தே மாதரம் பாடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளையும் சேர்த்து முழுமையாகப் பாடவேண்டும் என ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கூறிவரும் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. அவர்களின் கருத்துகள் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும், பன்முகத் தன்மைக்கும் எதிரானது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 01.10.2026 அன்று தலைநகர் டெல்லியில் மாற்றத்தை நோக்கி... என்ற முழக்கத்துடன் மிகப் பிரமாண்டமான பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளத்திலிருந்து செல்வதற்காக சிறப்பு ரயிலுக்கு முன்பணம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று ஒன்றிய அரசு அந்த ரயிலுக்கு அனுமதித்தர மறுத்து விட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியை முடக்குவதற்காக ஒன்றிய அரசு சதி செய்துள்ளது. ஆனாலும், கட்சித் தோழர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேறு மார்க்கத்தில் செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வெற்றிகரமாக அந்தப் பேரணி நடைபெறும்” என்று மு.வீரபாண்டியன் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் எம்.ரவி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மோகன்குமார், மாநிலக்கு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, லி.உதயக்குமார், க.இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com