நாமக்கல்லில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின், வறுமையைப் பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் என்ற நபர் மூலம் நடைபெற்றுள்ள கிட்னி திருட்டு, நாட்டையே அதிர வைத்துள்ளது என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“ மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தும், திமுகவினருக்குத் தொடர்புடைய இன்னும் சில மருத்துவமனைகளில் வைத்தும் தான், தங்களுடைய கிட்னி எடுக்கப்பட்டது என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்துச் செய்திகள் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், கிட்னி திருட்டில் புரோக்கராகச் செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தனை, திமுக அரசு கைது செய்யவில்லை. தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகக் காவல்துறை கூறி வருகையில், அந்த நபர், அவரது வீட்டருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என, பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருக்கின்றனர். திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணம். அதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போலச் செயல்படுகிறது முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை.
தமிழகத்தில், கந்து வட்டி தடைச்சட்டம் உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில், கிட்னி திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், கந்து வட்டி கடனைத் தீர்க்கவே சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனை செய்ய முன்வந்ததாகத் தெரிவிக்கின்றனர். விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருடும் கும்பலில் சிக்க வைத்தது என, இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னலும், பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
உடல் உறுப்பு திருட்டு என்பது, உலக அளவிலான பெரும் குற்றங்களில் ஒன்று. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு குறித்த செய்தி வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், திமுக அரசு இத்தனை மெத்தனப் போக்கில் செயல்படுவது, இந்தக் குற்றத்தில், திமுக புள்ளிகளுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது. திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன், தனி நபராக இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை.
முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் இனியும் தாமதிக்காமல், உடனடியாக, சிறப்புப் புலனாய்வுப் படை அமைத்து, இந்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதோடு, இதில் தொடர்புடைய நபர்கள், மருத்துவமனைகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.