குடியிருப்புக்காகப் போராடியவர்கள் மீது வழக்கா?- கைவிடக் கோரும் வீரபாண்டியன்

Published on

குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்காகப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“ சென்னை சைதாப்பேட்டை தொகுதி மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில்  20 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் ,அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய  வேண்டுமென மிரட்டப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் 07.09.2026 காலை காவல்துறை அந்த குடியிருப்புப் பகுதியில் குவிக்கப்பட்டு,20 குடும்பங்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் வாடகை செலுத்தி நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும், அம்மக்களின் வசிப்பிட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில்  செயல்பட வேண்டும் என வலியுறுத்தி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடினர்.

போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ர.சௌமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் உட்பட 8 பேர் மீது இந்துசமய அறநிலையத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.” என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com