கூட்டணி - பா.ம.க. பொதுக்குழுவில் விளக்கம்!

கூட்டணி - பா.ம.க. பொதுக்குழுவில் விளக்கம்!

பா.ம.க.வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில், நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மான விவரம்:

“2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் இராமதாசுக்கு வழங்குகிறது.” என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 24 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்:

” தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்

வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். 

27% ஓபிசி உள் இட ஒதுக்கீடு - ரோகிணி ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும். 

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கும், சம்பா சாகுபடி செய்யாத உழவர்களுக்கும் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

உழவர் நலனுக்கு எதிரான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். 

என்.எல்.சி சுரங்கங்கள், சிப்காட் உருவாக்கம்/ விரிவாக்கத்திற்காக நிலம் கையகப் படுத்த தடை விதிக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி.க்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து வலுப்படுத்த வேண்டும்.

படித்த இளைஞர்களுக்கு 6 லட்சம் அரசு வேலைகளை வழங்க வேண்டும். 

தமிழ்நாட்டில் தனியார்  தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்துப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுக்களை உடனடியாக தொடங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் - தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்றத் தடையை மீறி மேகதாது அணைகட்ட முயற்சி மேற்கொள்ளும் கர்நாடக அரசுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாற்றின் புதிய அணை கூடாது; அனுமதியின்றி பதற்றத்தை ஏற்படுத்தும் கேரள அரசைக் கண்டிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

தமிழ்நாட்டில் மக்களைக் காக்க மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்!

தமிழ்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கஞ்சாவை ஒழிக்க வேண்டும்.

ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறைக்கு முடிவுகட்ட வேண்டும்.

நீட் விலக்குச் சட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பள்ளிகள் முதல் உயர்நீதிமன்றம்வரை - எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் உடனே  தடை பெறவேண்டும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை சென்னையின் பெரிய பூங்காவாக மாற்ற வேண்டும்.

சென்னை விமான நிலையம் &கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com