கொங்குவைக் குறிவைக்கும் ஸ்டாலின் - 4 மாவட்டங்களுக்கு புது திட்டங்கள்!

கொங்குவைக் குறிவைக்கும் ஸ்டாலின் - 4 மாவட்டங்களுக்கு புது திட்டங்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு நலத்திட்டங்களை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கொங்கு பகுதியைச் சேர்ந்த கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அவருடைய பேச்சிலிருந்து... :

ஏற்கெனவே மேற்கு மாவட்டங்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் தொடர்ச்சியாக, சில புதிய அறிவிப்புகளையும் இந்த விழாவில் மகிழ்ச்சியோடு நான் வெளியிட விரும்புகிறேன்.

கோவை மாவட்டத்துக்கான பதிமூன்று அறிவிப்புகள்…

இந்த பொள்ளாச்சி பகுதி தென்னை மரங்கள் நிறைந்து இருக்கின்ற பகுதி. கோடை வெயிலுக்கு குளிர்ச்சியை தருகின்ற பொள்ளாச்சி, இளநீரை விளைவிக்கின்ற வகையில் ஒரு அறிவிப்பை முதலில் நான் வெளியிட விரும்புகிறேன்.

தென்னை மரங்களை அதிகமாக பாதிக்கின்ற நோய் வேர்வாடல் நோய் இருக்கு.  அந்த தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 14 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

இரண்டாவதாக, 3 இலட்சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

மூன்றவதாக, அகில இந்திய அளவில் தேங்காய் விற்பனை செய்வதற்கான உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் செயல்படுகிற 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் வெளி மாநில வணிகர்களோடு தொடர்பு ஏற்படுத்தி, வெளிப்படைத் தன்மையோடு வணிகர்கள் மற்றும் வேளாண் பெருமக்கள் நேரடியாக விற்பனையில் கலந்து கொள்வதை ஊக்குவித்து, தென்னை விவசாய பெருமக்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், வங்கி பரிவர்த்தனை மூலமாக அவர்களுடைய வங்கி கணக்குக்கு உடனடியாக வரவு வைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

நான்காவதாக, தென்னை விவசாயின் நலன் கருதி, கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களின் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும்.

ஐந்தாவது அறிவிப்பாக, விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கிலோ மீட்டர் நீளத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.

ஆறாவதாக, வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.

ஏழாவதாக, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட குடிநீர்த் தொட்டி கட்டித் தரப்படும்.

எட்டவதாக, காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டுல சாலை சீரமைக்கப்படும்.

ஒன்பதாவதாக அறிவிப்பாக, இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் - திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்பதி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும்.

பத்தாவதாக, 15 அங்கன்வாடி மையங்கள் –18 நியாயவிலைக் கடைகள் – 14 சமுதாய நலக் கூடங்கள் – 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

பதினோறாவது அறிவிப்பாக, கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் சாலை
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பன்னிரண்டாவதாக, உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்துநிலையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமுறையில் சீரமைக்கப்படும்.

பதிமூன்றாவது அறிவிப்பாக, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டுத் தரை அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்துக்கான ஒன்பது அறிவிப்புகள்

முதலாவதா, சோலார் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படும்.

இரண்டாவதாக, வ.உ.சி பூங்கா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தித் தரப்படும்.

மூன்றாவதாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதியில 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படும். 

நாலாவதாக, புதிய மாவட்ட மைய நூலகம் ஒன்று 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஐந்தாவதாக, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சி தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தலமலை ஆசனூர் ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இணைப்புச் சாலை வசதி இல்லாத அந்த 9 கிராமங்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்தப்படும்.

ஆறாவதாக, 8 சமுதாய நலக்கூடங்கள்  கட்டப்படும்.

ஏழாவதாக, சத்தியமங்கலம் நகராட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எட்டாவது அறிவிப்பாக, மஞ்சள் மற்றும் மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய ஏதுவாக  குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பாக, பெருந்துறையில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில் இருக்க கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தொல்லியல் துறையின் மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்துக்கான ஐந்து அறிவிப்புகள்

முதலாவதாக, பெருமாநல்லூர் சாலையில், நல்லாற்றில், பொம்மநாயக்கன்பாளையம் மற்றும் போயம்பாளையம் சாலை வரை மற்றும் பிச்சம்பாளையம் மெயின் சாலை முதல் ராஜா நகர் வரை
11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படும்.

இரண்டாவதாக, திருப்பூர் மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் அமைக்கப்படும்.

மூன்றாவதாக, கிராமப் பகுதிகளில் 8 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 

நான்காவதாக, 13 சமுதாய நலக்கூடங்கள் 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஐந்தாவதாக, பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக விபத்து மற்றும் எலும்புமுறிவு சிறப்பு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

அடுத்து, நீலகிரி மாவட்டத்துக்கான நான்கு அறிவிப்புகள்

முதலாவதாக, உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும். இதற்காக பெரணி இல்லம் புதுப்பித்தல், புதிய சுகாதார வளாகம் அமைத்தல், ஆர்க்கிட் மற்றும் போன்சாய் வளர்ப்புக்கூடம், வடிகால் கால்வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இரண்டாவதாக, 5 அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம்  2 கோடியே 50 இலட்சம் ரூபாயில் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.

மூன்றாவதாக, தனியார் கட்டடங்களில் இயங்குகிற 10 நியாயவிலைக் கடைகளுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

நீலகிரி மாவட்டத்தில்

2 சமுதாய நலக் கூடங்கள்
1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்." என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com