கொள்முதல் விவரம் தெரியாமல் பழனிசாமி பொய் - முதல்வர் ஸ்டாலின்

கொள்முதல் விவரம் தெரியாமல்   பழனிசாமி பொய் - முதல்வர் ஸ்டாலின்
Published on

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முடிவுற்ற திட்டங்களைத் திறந்துவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

அப்போது அவர் பேசியது : 

” எப்போதும் மக்களையே நினைத்துக் கொண்டு நாங்கள் இயங்குகின்ற காரணத்தால் தான் மக்களாகிய நீங்களும் எங்களுடன் இருக்கிறீர்கள்!  நமக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கம்தான் சிலரை தூங்கவிடாமல் செய்கிறது.  அதனால்தான், நாள்தோறும் ஏதாவது ஒரு அவதூறு செய்தியை அடித்து விடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, விரக்தியின் உச்சத்துக்கே சென்று பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இப்போது எப்படி பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீரை பாசனத்துக்காக குறிப்பிட்ட நாளில் இல்லை, அதற்கும் முன்பாகவே திறந்துவிடுகிறோம். தொடர்ந்து நல்ல மழை பெய்கிறது, நல்லாட்சிக்கான அடையாளமாக மக்கள் இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை வைத்தும் சிலர் அரசியல் செய்கிறார்கள்.  என்ன அரசியல் - “விளைவித்த நெல்லை வாங்கவில்லை, அது அழுகிவிட்டது” என்று ஏதாவது அவதூறுகளை பழனிசாமி சொல்லிக் கொண்டு வருகிறார்.

விவசாயப் பெருமக்கள் பாடுபட்டு, உற்பத்தி செய்கின்ற  நெல்லை ஒரு நெல்மணி கூட வீணாக கூடாது என்று அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். அந்த அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளில், முந்தைய ஆட்சிக் காலத்தைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு  வந்திருக்கிறது. 

நம்முடைய ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. பாசனப் பரப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப நெல் கொள்முதலையும் அதிகரித்திருக்கிறோம். நெல் கொள்முதல் கிடங்குகளும் அதிகரித்திருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 70 இலட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன்!  இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் -  42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன். இது நம்முடைய ஆட்சியின் டேட்டா!

இதுவே முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் எவ்வளவு தெரியுமா?  ஆண்டுக்கு 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் மட்டும்தான்! இந்த அடிப்படை கூட தெரியாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவரிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது! அவருடைய ஹிஸ்டரியே அதுதான்! 

நெல் கொள்முதல் குறித்த மேலும் சில புள்ளிவிவரங்களை சொல்ல வேண்டும் என்றால்,

அதிமுக ஆட்சிக் காலத்தில், அக்டோபர் முதல் தேதிதான் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் ஒரு மாத காலம் முன்பாகவே, அதாவது செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் நெல் அறுவடை செய்து,  புதிய விலையில், நெல்லை விற்க ஒரு மாதத்திற்கு முன்பாகவே, செப்டம்பர் 1-ஆம் தேதியே கொள்முதல்  தொடங்கப்பட்டுவிட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன்.  அவர்களும் அந்த கோரிக்கையை பார்த்துவிட்டு, வந்து பார்வையிட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.  நெல் வரத்து அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது.

இது எதுவும் தெரியாமல், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். புலம்பிக் கொண்டிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரைக்கும், தினந்தோறும் இதைப் பற்றி விசாரித்து நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கின்ற பழனிசாமி ஆட்சியில் தான் மிக மோசமான நிலை – என்னவென்றால்,  மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக, 2 ஆண்டு காலம் போராடுகின்ற விவசாயிகளைப் பற்றி என்ன சொன்னார் பழனிசாமி, ‘புரோக்கர்கள்’ என்று கொச்சைப்படுத்தி பேசினார் – அதை நானும் மறக்கமாட்டேன். விவசாயிகளும் மறக்க மாட்டார்கள்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக,  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தவன் இதோ உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதுவும் நாட்டிற்கு நன்றாக தெரியும்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மழைநீர் தேங்கி பாதிக்கப்படக் கூடாது என்ற, மக்கள் அச்சமில்லாமல், தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட உதவுகின்ற வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து நிலைமையை கண்காணித்து அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து அதை நாங்கள் Follow செய்கிறோம். மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படுகின்ற பகுதிகளில், வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்திருக்கிறோம்.

சென்னையில், நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், விழும் மரங்களை அகற்ற மர அறுவை இயந்திரங்கள் என்று அனைத்துமே தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி போர்க்கால தயாரிப்பு நிலையோடு நாம் இருக்கிறோம்.  மக்களைக் காக்க எங்களுக்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை.  நாம் ஆட்சிக்கு வந்து மூன்று முறை இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்திருக்கிறோம். வேண்டிய உதவிகளை செய்து மக்களைக் காப்பாற்றினோம். ஆனால், பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சரி செய்ய, நிவாரணப் பணிகளுக்காக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு வழங்கியதா? இல்லை! இதுவரைக்கும் வழங்கவில்லை. ஏன் வழங்கவில்லை? அப்படி வழங்கினால், தமிழ்நாடு சீராகிவிடும், வளர்ந்துவிடும். அது நடைபெறக் கூடாது என்று நினைக்கிறார்கள் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசு.

ஒன்றிய அரசு பணம் வழங்கினாலும், வழங்காமல் போனாலும் தமிழ் மக்களைக் காப்பது தான் நம்முடைய கடமை என்று செயல்பட்டு வரக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால், என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.

இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கின்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையை பறிக்கின்ற சதியை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே, பீகாரில், இதனால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். பா.ஜ.க. தோல்வி உறுதியானால், வாக்காளர்களையே நீக்கத் துணிந்தார்கள். அதே Formula-வை தமிழ்நாட்டிலும் இப்போது முயன்று பார்க்கிறார்கள்.

தொடக்கம் முதலே இந்த சதியை உணர்ந்து நாம் எல்லோரும், அனைத்து வகையிலும், இதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது கேரளாவும் நம்முடன் இதில் இணைந்திருக்கிறார்கள்.

இந்த மேடையிலிருந்து மீண்டும் உறுதியாக சொல்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான்!  அதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்!  வாக்குரிமைப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம்! தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்!” என்று ஸ்டாலின் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com