யாரையும் பின் தங்கவிடமாட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது; போராடிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று காலையில் நேரடியாகக் கலந்துகொண்டு பேசினார்.
இராமதாஸ் இன்றைய அறிக்கை ஒன்றில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், ”தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதன்முதலில் நியமிக்கப்பட்ட போது, அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்பட்டது. அதன்பின் அவர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி தங்களின் ஊதியத்தை ரூ.57,800 ஆக உயர்த்த வேண்டும், அனைத்து கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்கவேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. 20 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு கிடையாது. அடிப்படை உரிமைகளுக்காக போராடிய பலர் இறந்துபோனார்கள். அவர்களின் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. உயர் கல்வியில் ஒளிரும் தமிழ்நாடு என்ற பலத்த குரலில் முழங்கும் அரசு, கல்வியை வழங்கும் கவுரவ விரிவுரையாளர்களின் குரலை செவிகொடுத்து கேட்க இயலாமல் உள்ளது வருத்தமளிக்கிறது.
கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் தொடர்பாக 28.01.2019-ம் தேதி ஆணையிட்ட பல்கலைக்கழக மானியக்குழு ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் தமிழ்நாட்டில்தான் வழங்கப்படுகிறது.” என்றும் இராமதாசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.