
சக மாணவர்கள்தாக்கியதில் மேல்நிலைப் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் அருகில் அரங்கேறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தவன், கவியரசன் என்ற சிறுவன். அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேரால் இந்தச் சிறுவன் சில நாள்களுக்கு முன் கொடூரமாக தாக்கப்பட்டான்.
திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் கிராமததைச் சேர்ந்த மாணவர் கவியரசனுக்கும், தாக்கிய மாணவர்களுக்கும் கடந்த புதன்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது மீண்டும் மோதல் ஏற்பட்டது.
அம்மோதலின் தொடர்ச்சியாக புதன்கிழமை மாலை மாணவர் கவியரசன் வீடு திரும்பும் போது அவரை வழிமறித்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கவியரசன் முதலில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
பின்னர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலும் மருத்துவம் பெற்று வந்த சிறுவன் கவியரசன் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தான்.