
மதுரை கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி, 64ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலில், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மருது பாண்டியர்களின் 225ஆவது குருபூஜை விழாவையொட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கும் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தபோது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"இந்த ஆட்சி வரவேண்டும் என்று விரும்பி ஓட்டளித்தவர்கள் எல்லாம், இன்றைக்கு இந்த ஆட்சி எப்போது முடியும் என்ற நிலை போய்க்கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் மக்கள் என்னென்ன பேசுகிறார்கள் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ளது, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் பலாத்காரம், சிறைகளில் இருக்கும் கைதிகள் கூட தப்பித்து ஓடும் நிலை இன்று உருவாகி உள்ளது. இதனால், மக்கள் பல துன்பங்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் காணாமல் போகும் செய்தி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அவர், ஏதோ சினிமாவிலே ஹீரோவாக நடிப்பதை நம்பி, நிஜத்திலும் ஹீரோவாக இருப்பார் என்று நம்பியவர்கள் இன்று ஏமாந்து வருகிறார்கள்." என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.