புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வி.டி.ராஜசேகரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
” புகழ்பெற்ற பத்திரிகையாளர் – எழுத்தாளர் – சிந்தனையாளர் வி.டி.ராஜசேகர் அவர்களின் மறைவு என்பது, சாதிய அடக்குமுறைக்கு எதிரான சமரசமற்ற, துணிச்சலான குரல் ஒன்றின் இழப்பாகும்.
தனது ‘தலித் வாய்ஸ்’ இதழின் மூலமாக அறிவுக் கருத்தாடல்களை ராஜசேகர் அவர்கள் மேற்கொண்டதுடன், விளிம்புநிலை மக்களின் குரலை ஓங்கி ஒலித்தார். சமூகநீதி மற்றும் சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போரில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமைந்தது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது அன்புக்குரிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.