சமூகநீதி எனச் சொல்வதற்கே மு.க.ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை!

Anbumani Ramadoss
அன்புமணி
Published on

”சமூகநீதிக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடப்போவதாகவும், அதற்கான சக்தி  தமக்கு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். சமூகநீதிக்கு எந்த அளவுக்கு முடியுமோ, அதை விட அதிகமாகவே துரோகம் செய்து விட்டு, சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்தவரைப் போலவும், சமூக அநீதிக்கு எதிராக நிற்கப்போவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொருந்தாத வசனங்களைப் பேசுவது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி சாடியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

”தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த  வேண்டும் என்பது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கை.  ஆனால், ஆயிரமாயிரம் முறை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்த பிறகும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுத்தவர் மு.க.ஸ்டாலின்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1388 நாள்களாகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு  திமுக அரசு மறுத்து வருகிறது. சமூகநீதி வழங்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மதிக்காக திமுக அரசுக்கு சமூகநீதி பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை.

பட்டியலின மக்களுக்கு உள் இட இதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது மட்டுமின்றி, இட ஒதுக்கீட்டின் அளவையும் அதிகரித்திருக்கின்றன.  ஆனால், திமுக அரசு மட்டும் இந்த விஷயத்தில் கண், காது, வாய் உள்ளிட்ட அனைத்தையும் மூடிக் கொண்டிருக்கிறது.

எந்த வகையில் பார்த்தாலும் சமூக அநீதியின் அடையாளம் திமுக அரசு தான். சமூகநீதி என்ற உன்னத சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை  மு.க.ஸ்டாலின் அரசு எப்போதோ இழந்து விட்டது.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com