சிவகங்கை அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருப்புவனம் டிஎஸ்பி சண்முகசுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்தான் சென்னையில் இருந்து வந்த ஆணையின் பேரில் தன்னுடைய தனிப்படையை அனுப்பி அஜித்குமாரை வன்கொடுமைச் சித்ரவதை செய்து கொல்லக் காரணமாக இருந்தார் என்று ஏராளமானவர்கள் சமூக ஊடகங்களில் கோபத்துடன் வசைபாடி வருகின்றனர்.
அவரையும் அவருக்கு அப்படிச் செய்ய உத்தரவிட்டது யார் என்பதையும் விசாரித்துக் கூறவேண்டும் என்றும் மக்களிடையே கொந்தளிப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கட்டுக்கதை எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டதால், மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை ஆரம்பகட்ட சாட்சியங்கள் பாதுகாப்பு, விசாரணையை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி அவர் நான்காவது நாளாக இன்று விசாரணை நடத்தினார்.
முதலில், திருப்புவனம் காவல்நிலையத்தில் அஜித்குமார் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் பார்வையிட்டார். அதன்பிறகு, நெடுஞ்சாலைத் துறையின் ஆய்வுமாளிகைக்குச் சென்றார். அங்கு திருப்புவனம் கூடுதல் டிஎஸ்பி சுகுமார், ஆய்வாளர் இரமேஷ் குமார், தனிப்படை சிறப்பு சார் ஆய்வாளர் இராமச்சந்திரன் ஆகியோரிடம் அவர் விசாரித்தார்.
முக்கிய குற்றச்சாட்டுதாரியான டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் வெளியே வந்த சண்முகசுந்தரத்திடம் கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோது, போய்க்கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி அவர் தப்பியோடினார்.