
சாத்தான்குளம் தந்தை - மகன் சித்திரவதைக் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு தனித்தனியே இரட்டை மரண தண்டனை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவ்வழக்கில் மொத்தம் 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதில் பால்துரை என்பவர் கொரோனா காரணமாக இடையிலேயே உயிரிழந்துவிட்டார். அதனால் மற்றவர்கள் மீது வழக்கு நடத்தப்பட்டு வந்தது.
முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்த இவ்வழக்கு, பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
ஐந்து ஆண்டுகள் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் கடந்த வாரம் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கூறியது.
ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் முதலிய குற்றவாளிகளுக்கு நீதிபதி முத்துக்குமரன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.