Samsung workers strike
சாம்சங் தொழிலாளர் போராட்டம்கோப்புப் படம்

சாம்சங் வழக்கில் அரசுக்கு 6 வாரம் கெடு - நீதிமன்றம் உத்தரவு!

Published on

சாம்சங் விவகார வழக்கில் தமிழ்நாட்டு அரசின் தொழிலாளர் நலத் துறைக்கு உயர்நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை இட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இதில் சி.ஐ.டி.யு. தலைமையில் சாம்சங் தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பு தொடங்கப்பட்டது.

அதை முறைப்படி தொழிலாளர் நலத்துறையில் பதிவுசெய்ய அவர்கள் விண்ணப்பித்தார்கள். ஆனால் அதைப் பதிந்துதராமல் அத்துறை இழுத்தடித்தது.

அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனிடையே அந்த சங்கத்தினர் தொழிற்சாலை அருகில் தொடர் உண்ணாவிரதம், போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, அது பெரும் பிரச்னை ஆனது. ஆளும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளேயே முரண்பாடு வெளிப்பட்டது.

பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கவே, அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 37 நாள்கள் தொடர்ந்துவந்த போராட்டம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்தது.

இன்னொரு பக்கம் வழக்கு நடந்துவந்த நிலையில், இன்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆறு வாரங்களுக்குள் சிஐடியு சங்கத்தின் மனுவில் முடிவு எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை அச்சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com