தாக்குதலைக் கண்டித்து அருமனையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய சிபிஎம் கட்சியினர்
தாக்குதலைக் கண்டித்து அருமனையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய சிபிஎம் கட்சியினர்

சி.பி.எம். கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது போலீஸ் தாக்குதல்!

மார்க்சிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச்செயலாளர் செல்லசுவாமி மீது நித்திரவிளை காவல்துறை ஆய்வாளர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளார் என்று பிரச்னை எழுந்துள்ளது. 

இதுகுறித்து அந்த ஆய்வாளர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

”கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், நம்பாளி சந்திப்பில் 12.03.2024 அன்று உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. அப்போது அங்கு திறக்கப்பட்ட கல்வெட்டில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் மட்டுமே இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட கொல்லங்கோடு நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் திறக்கப்பட்ட பகுதியின் கவுன்சிலர் ஆகியோர் பெயரையும் வைக்க வேண்டுமென பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, திடீரென அங்கிருந்த அல்அமீன், சதீஷ் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர் எங்கள் கட்சியின் முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் தோழர் அனிஷ் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் இக்னோஸ் குமார் என்பவரும் அனீஷை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனைக் கண்டு சமாதானப்படுத்த சென்ற எங்கள் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் ஆர். செல்லசுவாமி அவர்களை நித்திரவிளை காவல்நிலைய ஆய்வாளர் நாகூசும் வார்த்தைகளால் அசிங்கமாக பேசியும், அவமரியாதை செய்தும் தாக்கியுள்ளார். மேலும் காவல் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதுடன் உள்ளே வைத்தும் அசிங்கமாக பேசியும், அடித்தும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமுற்ற எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமியும், அனிஷூம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாத எங்கள் கட்சியினரை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடும், அரசியல் சார்ந்தும் காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல் செயலாகும்.

எனவே, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் எங்கள் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி மீதும், முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் அனிஷ் மீதும் தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் இக்னோஸ் குமார் என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் அநாகரீகமாக பேசியும், அடித்தும் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திடுவதற்கும் தாங்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.” என்று பாலகிருஷ்ணன் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com