
சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடங்களை நிரப்புவதில் பிரதமர் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
” ஒன்றிய அரசின் பொது மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் (DGHS) தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க மறுப்பதால், மதிப்புமிக்க 1,857 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடக்கம்.
நேற்று, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க வழக்கில், உச்சநீதிமன்றமே தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, பிரதமர் மோடி இதில் உடனடியாகத் தலையிட்டு, முந்தைய ஆண்டுகளில் செய்ததைப் போல 'zero percentile'-க்குத் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வலியுறுத்துகிறேன்.
மேலும், இடங்களை நிரப்ப இயலாமல் போகும் நிலையில், பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே அவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்யவும் ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். பொது மருத்துவம் என்பது மாநில அரசுகளின் அரசியலமைப்புக் கடமையாகும்.
மக்களுக்கு உயர்சிறப்பு மருத்துவர்களுக்கான தேவை பெரிதும் இருக்கும்போது, நம் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்தான மருத்துவப் படிப்புக்கான ஓர் இடம் கூட வீணாகக் கூடாது.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.