சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டாம் நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக ஆக்கப்பட்டதற்காக தமிழக முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது; ஊழல் கறை படிந்தவரை உடனடியாக அமைச்சராக்கியதன் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் களங்கத்தைச் சேர்த்திருக்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெறுவதற்காக செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் ஒருவரான வித்யாகுமார் என்பவர், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக பிணையை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”என்ன இது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நேரடியாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். அவர் அமைச்சராக்கப்பட்டதால், வழக்கின் சாட்சிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் நியாயமாக்கப்படும்” என்று தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர் சித்தார்த்தா லூத்ராவை நோக்கி வினா எழுப்பியுள்ளார்.
இந்த விவரத்தை விவரித்துள்ள இராமதாசு, “நீதியரசர் எழுப்பிய வினாக்களையும் தெரிவித்த கண்டனத்தையும் தமிழக அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நோக்கி எழுப்பப்பட்ட வினாவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் மாத இறுதியில் பிணை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டாவது நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது மட்டும் சிக்கல் அல்ல. அதையும் தாண்டி செந்தில் பாலாஜியை தியாகி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார்.” என்பதை நினைவூட்டியுள்ளார்.
”தமிழ்நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.” என்றும் இராமதாசு தன் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார்.