சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நான்காவது வழித்தின் 8 கி.மீ. நீளப் பாதையில் அஸ்திவாரத் தூண்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர் அவுசுக்கும் போரூர் சந்திப்பு நிலையத்திற்கும் இடையேதான் உயர்மட்ட வழித்தடத் தூண்கள் அமைக்கும் பணி 100% வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இதன் மூலம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்று அதன் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்களையும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களையும் கொண்டது. இவற்றின் கட்டமைப்பு, தூண்களைத் தாங்குவதற்காக தரைக்குக் கீழே 2,255 அஸ்திவாரத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை அமைப்பதற்குள் குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொதுப் பயன்பாட்டில் உள்ள உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை மாற்று வழியில் செயல்படுத்துதல், 1,200 மி.மீ. நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தடத் தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல், 1,500 மி.மீ. நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் அமைத்தல் என பல சவால்கள் குறுக்கிட்டன. இவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்து இந்தப் பணி முடிக்கப்பட்டுள்ளது.