சேலம் தலேமா மின்னணு நிறுவனத்தில் தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் நிருவாகத்தைக் கண்டித்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீண்டும் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
”சேலம் தலேமா நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் 500 நிரந்தர தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த காமிக் என்ற பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனம் சேலம் தலேமா நிறுவனப் பங்குகளை வாங்கிய பிறகு, ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, 500 நிரந்தர தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு, அவர்களுக்கு மாற்றாக, தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் ஆகியோரை, நியமித்து நிறுவனத்தை வேறொரு இடத்தில் நடத்த, தலேமா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தலேமா நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில், மாதத்தில் 24 நாட்களுக்கும், பெரும்பான்மை தொழிலாளர்களை வைத்து, 100 சதவீதம் உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
ஆனால், அந்த உண்மையெல்லாம் மறைத்து, தலேமா நிறுவனத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பொய்யான காரணத்தை கூறி, பிற மாவட்டங்களில் உள்ள மாற்று நிறுவனத்தில் ஆர்டர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை நிரந்தரமாக தக்க வைத்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசிடம் முறைகேடாக அனுமதி பெற்று, பொருளாதார மந்த நிலை என தவறுதலாக காரணம் காட்டி, ஊதிய உயர்வு மற்றும் இதர அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பது என்பது தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது.
தலேமா நிறுவனத்தின் தவறான நடவடிக்கையால், கடந்த 12 மாத காலமாக, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாதம், ரூ. 5 லட்சம் என ஆண்டுக்கு ரூ. 25 கோடியை இழந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அரசாணையும், சட்டத்தையும் மதிக்காமல், தொழிலாளர்கள் நலனில் துளி கூட அக்கறை காட்டாமல், நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளையும் நீக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையத்திடம், தலேமா தொழிலாளர்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
எனவே, சேலம் தலேமா தனியார் மின்னணு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த 12 மாதங்களான தொழிலாளர்கள் இழந்த ரூ. 25 கோடியை மீட்டுத்தர வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மீண்டும் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் வேல்முருகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.