கரூர் துயரத்தில், ஆம்புலன்ஸ் வண்டியின் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனுக்கு பிணை விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரம் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது, அவசர ஊர்திகள் கூட்டத்திற்குள் சென்று மயங்கி விழுந்தவர்களைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த வண்டிகளை ஓட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் கௌதம், த.வெ.க.வினர் தன்னையும் நண்பர்களையும் தாக்கியதாகவும் வண்டியின் கண்ணாடியை உடைத்ததாகவும் வெங்கடேசன் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன்படி, வெங்கடேசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
அவர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறையோ, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, நிபந்தனைப் பிணை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, கரூர் காவல் நிலையத்தில் அன்றாடம் ஒரு வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.