”நாளை வெளியாகவுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அரசால் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை மீறி விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச் சந்தை மூலம் மக்களிடம் அதிக விலை வசூலிக்கப்படுவதாகவும் வெளியாகும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.” என த.வா.க. தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
” ஒரு திரைப்படத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை, சிலர் இலாப வேட்டைக்கான வாய்ப்பாக மாற்ற முயற்சித்தால், அது வெறும் நுகர்வோர் உரிமை மீறல் மட்டுமல்ல. சட்டத்தின் மீதான வெளிப்படையான அவமதிப்பாகும்.
தாங்கள் விரும்பும் நடிகர்களின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் ஆர்வத்துடன் பார்க்க வரும் இரசிகர்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி, அவர்களின் சட்டைப் பையில் இருக்கும் பணத்தைப் பகல் கொள்ளையடிப்பது போன்ற இந்தக் கட்டணக் கொள்ளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரசிகர்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் இலாபத்திற்கானக் கருவியாக மாற்றும் இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ளத் திரையரங்குகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா?, டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், எந்த நடிகரின் திரைப்படமாக இருந்தாலும், எந்த நிறுவனத்தின் திரையரங்காக இருந்தாலும், யார் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி உரிமங்கள் இரத்து செய்யும் அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்று தி.வேல்முருகன் கூறியுள்ளார்.