
கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன்வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
” திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கேவிஎன் புரோடெக்சன் நிகழ்கால அரசியல் போக்குகளை எதிரொலிக்கும் “ஜனநாயகன்” என்ற பெயரில் திரைப்படம் தயாரித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட தேதி நிர்ணயிக்கப்பட்ட, இந்தத் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 15 தேதி தணிக்கை வாரியத்தின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத்தின் மூலம் 16 பேர் படம் பார்த்து, பரிசீலித்ததன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டு, படத்தை 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம் என சான்று வழங்க முடிவு செய்துள்ளது.
தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து, படத்தயாரிப்பாளர்கள் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றம் இது தொடர்பான விசாரணை நடத்தி வருகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழங்கும் முறையில் அரசியல் தலையீடுகளும், விளையாட்டும் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும்.
கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன்வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, திரைப்படத் தணிக்கைக் குழுவை வலிறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பல தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.