தமிழ்நாட்டில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
”வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றுவது, கடல் பகுதிகளில் இருந்து மீனவர்களை வெளியேற்றுவது, துணி உற்பத்தியிலிருந்து நெசவாளர்களை வெளியேற்றுவது இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது.
இவர்களின் திட்டங்கள், பொருளியல் கொள்கைகள் ஆகிய அனைத்தும் இத்திசையிலேயே செயல்பட்டு வருகின்றன. இப்போது சில்லரை வணிகத்திலிருந்து மண்ணின் வணிகர்களை வெளியேற்றும் திட்டத்தை, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஜி.எஸ்.டி. ஆன்லைன் வர்த்தகத்தால் நாட்டில் சில்லரை வணிகம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், மளிகை வணிகம் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்த வணிகர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.” என்று இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
”அதாவது, அதானி, அம்பானி, டி மார்ட் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உள்நாட்டு சில்லரை வணிகர்களும், உழவர்களும், சிறு உற்பத்தியாளர்களும் நசுங்க வேண்டும் என்பதே, ஒன்றிய அரசின் திட்டமாகும்.” என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
”தற்போது, டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், நகர்ப்புறங்களில் உள்ள சில்லரை விற்பனையகங்களில் உணவு, பானங்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களின் விற்பனை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால், உள்ளூரைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் சரிவை சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றால், சில்லரை வணிகம் செய்ய அந்நியரை அனுமதிக்கக் கூடாது. ஆன்-லைன் வர்த்தகத்தைத் தடைசெய்ய வேண்டும். தவறான ஏற்றுமதி, இறக்குமதியை முறியடிக்க வேண்டியது கட்டாயம்.
எனவே, அக்கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, அப்போராட்டத்திற்கு துணை நிற்கும்.” என்று பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.