நீரில் மூழ்கிய நெற்பயிர்
நீரில் மூழ்கிய நெற்பயிர்(கோப்பு படம்)

’தஞ்சையில் 10,000 ஏக்கர், மயிலாடுதுறையில் 25,000 ஏக்கர் பயிர்கள் நாசம்!’

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமாகி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் விவசாயிகள் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், 
”காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 6,7,8 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டம், சீர்காழி வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் முற்றிலும் சாய்ந்து விட்டது. இரண்டு, மூன்று நாட்கள் தண்ணீரில் மூழ்கி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், கதிர் வந்து பழுக்காத நெற்கதிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்றும்,  

”தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் ஒரத்தநாடு ஆகிய பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சாய்ந்துள்ளது. மேலும் குறுவை அறுவடை முடிந்து சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, எள், நிலக்கடலை பயிர்கள் தொடர் மழையில் பாதிக்கப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட பகுதியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வேளாண்மைதுறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை விடுபடாமல் முழுமையாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கிட வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள பயிர்களுக்கான இழப்பீட்டை இந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலத்தோடு பெற்றுத்தர மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com