தனியார் பல்கலை. சட்டம்- தி.மு.க., அ.தி.மு.க.வை விஞ்சும் விஜய்!

Madurai kamaraj university
மதுரை காமராசர் பல்கலை. By LIC Habeeb at ml.wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=11728062
Published on

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்தை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி கண்டித்துள்ளது.

”தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசாங்கம் கல்வியை மேலும் தனியார்மயமாக்கும் வண்ணம் 2019யில் அதிமுக அரசு கொண்டு வந்த  தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 4 யை  திருத்தியுள்ளது.  தனியார் பல்கலைக்கழகம் அமைக்கக் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவை எனக் குறிப்பிட்டு இருந்ததை தளர்த்தி இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் பல்கலைக்கழகம் தொடங்க 25 ஏக்கருக்கு பதிலாக 12 ஏக்கரும்; நகராட்சி அல்லது பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கருக்கு பதிலாக 18 ஏக்கரும்;  பிற பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே போதுமானது என்பது 25 ஏக்கராகவும் இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் குறைக்கப்பட்டு உள்ளது.


பல்கலைக்கழகத்திற்கான நிரந்தர வைப்பு தொகை கூட 50 கோடிகளில் இருந்து மிகவும் குறைக்கப்பட்டுவிட்டது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐப் பின்பற்றி சந்தை சக்திகளுக்கு ஏதுவாக கல்வியை வணிகமாக்குவதில் த.வெ.க.வின் விஜய் அரசோ, திமுக, அதிமுக அரசுகளை விஞ்சும் விதத்தில் செல்கிறது.


தமிழ்நாடு த.வெ.க அரசாங்கம் கல்வியைத் தனியார்மயம் ஆக்குவதை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.

த.வெ.க அரசாங்கத்தின் இந்த கல்வி விரோத, மாணவர் விரோத போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க அனைத்துப் பகுதி மக்களும், ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களும் முன்வர வேண்டும்.” என்று அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.    

logo
Andhimazhai
www.andhimazhai.com