தமிழகத்தில் 74 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம்- இறுதிப்பட்டியல் வெளியீடு!

அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரி
அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரி
Published on

தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிரத் திருத்தத்துக்குப் பின்னர் இன்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் 74 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR, 2026) 27.10.2025 முதல் 23.02.2026 வரை தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட வரைவுப் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான ஏற்புரைகள், மறுரைப்புரைகளுக்கான காலத்தில், 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

மேலும் 4.23 லட்சம் தகுதிபெறாத நபர்கள் நீக்கப்பட்டனர்.

அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026-இன் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி, மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (ஆண்: 2,77,38,925; பெண்: 2,89,60,838; மூன்றாம் பாலினம்: 7,617) ஆகும்.

இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.

மாற்றுத்திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்; 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம் பேர்.

தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை, தலைமைச்செயலகத்தில் இன்று முற்பகல் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்டவாரியான பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் காலையில் வெளியிட்டனர்.            

logo
Andhimazhai
www.andhimazhai.com