தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு- சி.பி.எம். கவலை!

CPIM K. Balakrishnan
கே.பாலகிருஷ்ணன், சிபிஐஎம்
Published on

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது, குறிப்பாகக் கல்விக் கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் அறிக்கையில், ”சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும்  மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வன்குற்றச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னையின் மையப்பகுதியில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி நடந்திருப்பது அங்கு பயிலும் மாணவிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ”பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்கிட வேண்டுமெனவும், சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், விடுதிகள் அனைத்திலும் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிட வேண்டுமெனவும், பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் பாலகிருஷ்ணனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com