தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநர்... எதிர்க்காத விஜய் அரசு - த.மு.எ.க.ச. கண்டனம்!

tpwaa
த.மு.எ.க.ச.
Published on

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் விஜய் அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் போராட்டத்தை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

“ தற்போதைய தமிழ்நாடு முதல்வரின் பதவி ஏற்பு நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மூன்றாவது இடமும், வந்தே மாதரம் பாடலுக்கு முதல் இடமும் வழங்கப்பட்டது. அப்போதும் தமுஎகச உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகளும், தமிழ் உணர்வாளர்களும் கண்டனம் தெரிவித்தோம். அது ஆளுநர் மாளிகை நிகழ்வு என்பதால், அவ்வாறு நடந்து விட்டதாகவும், மாநில அரசின் நிகழ்வுகளில் வந்தேமாதரம் ஒலிக்காது என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தோடு தான் தொடங்கும் என்றும், தமிழ்நாடு கல்வி அமைச்சர் அப்போது உறுதியளித்தார். ஆனால் அரசுத் தரப்பில் இதுபற்றி எந்த விளக்கக் குறிப்பும் வெளிவரவில்லை.

சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது வந்தே மாதரம் ஒலிக்கப்படாவிட்டாலும், தேசிய கீதம் தொடக்கம் முடிவு என்று இரு முறையும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் ஒரு முறை மட்டும் பாடப்பட்டது. இது தமிழ்நாட்டின் மரபிற்கு எதிரானது என்று மீண்டும் கண்டனங்கள் எழுந்தன. அப்போதும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

தற்போது, நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா வரும் 28.07.2026 தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்போடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வந்தேமாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசையில் பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை ஆணையிட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது ஆளுநர் உத்தரவு என்பதால் மீறமுடியாது என்றும் சொல்கிறார். இந்நிகழ்விலும் வந்தே மாதரம் முதலாவதாக இணைக்கப்பட்டு, அடுத்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் என்று தள்ளப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. அதுவும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைகழகத்தில், ஒன்றிய அரசின் ஆணைப்படி ஆளுநர் தரப்பால் திணிக்கப்படுவதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது.

இது மாநிலங்களின் தன்னுரிமையையும், தேசிய இனங்களிம் உணர்வுகளையும், இந்நாட்டின் பன்மைத்துவத்தையும் நசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதித் திட்டங்களுள் ஒன்று என்றே தமுஎகச கருதுகிறது. ஆளுநர் மாளிகை நிகழ்வில் தொடங்கிய இந்த நடைமுறை தற்போது பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு வந்து, நாளை கல்லூரி, பள்ளி நிகழ்வுகளுக்கும் சென்று, தமிழைப் புறந்தள்ளும் நடைமுறையை இயல்பாக்க நினைக்கின்ற வலதுசாரி சக்திகளின் செயல் திட்டம் போல் உள்ளது. இதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழ்மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், தேவையில்லாமல் திணிக்கப்படும் இந்த நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு அமைதி காப்பதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. இதில் உடனடியாகத் தலையிட்டு, சரி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமுஎகச வலியுறுத்துகிறது.

தமிழர் உரிமை, தமிழ்நாட்டு உரிமை என்றால் முன்னின்று செயலாற்றும் அமைப்பு தமுஎகச. இந்நிகழ்விலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளை இணைத்துக் கொண்டு, அதே நெல்லை பாளையங்கோட்டையில் 27.07.2026 இன்று மாலை மாபெரும் கண்டன இயக்கத்தை நடத்த உள்ளோம்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் உரிமையைக் காத்திடும் இவ்வியக்கத்தில் பங்கேற்குமாறு, அனைத்து ஜனநாயக சக்திகளையும், தமிழ் உணர்வாளர்வளையும், கல்வியாளர்களையும் தமுஎகச இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறது. வாருங்கள்! தமிழ்த் தாய்க்காக ஒன்றிணைவோம்!” என்று த.மு.எ.க.ச. தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன்ஆகியோர் கூறியுள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com