தமிழ்நாடு, உ.பி.க்கு எவ்வளவு நிதிப் பகிர்வு?- தங்கம் தென்னரசு விளக்கம்

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

நிதிப்பகிர்வில் 7.5 இலட்சம் கோடி ரூபாய் அளித்துள்ள தமிழ்நாட்டைவிடக் குறைவாக வழங்கிய உத்தரப்பிரதேசத்துக்கு பல மடங்கு அதிகமாக மைய அரசு நிதியை ஒதுக்கியுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதங்கப்பட்டார்.

பேரவையில் கூடுதல மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் இதைக் குறிப்பிட்டார். அவையில் அவர் பேசியது :

” நிதிப் பகிர்வு என்று வருகிறபோது, Finance Commission சார்பாக வந்தவர்கள் நீங்கள் எல்லாம் developed States என்று சொன்னார்கள். Developed States என்று சொல்லக்கூடிய அந்த காரணத்தினால்தான் தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பை--உங்களுக்கும் சேர்த்து சொல்வேன். நீண்ட பல காலமாக நாம் உருவாக்கியிருக்கக்கூடிய இந்த உட்கட்டமைப்பு, நாம் உருவாக்கியிருக்கக்கூடிய கல்வி கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு, நாம் உருவாக்கி இருக்கக்கூடிய சமூக பொருளாதார காரணிகளுடைய வளர்ச்சி, ஆக இவற்றையெல்லாம் எண்ணி நாம் பெருமைப்படக்கூடிய அதேநேரத்தில், இவற்றையெல்லாம் குறித்து உங்களுடைய வார்த்தையில் சொல்லவேண்டுமென்று சொன்னால், நீங்கள் developed state என்கிற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு, penalise செய்யப்படுகிறது என்பதை நீங்களே ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) வளர்ச்சிக்கு வருகிறோம். வளரக்கூடிய பிள்ளைகளுக்கு நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதற்காக ஊட்டச்சத்தை நிறுத்துவேன் என்பது எந்தவகையில் நியாயம். எனவே, நான் திருப்பி வருவேன் என்று சொன்னால், (மேசையைத் தட்டும் ஒலி) 8-ல் ஒரு சாலைகூட நீங்கள் தமிழ்நாட்டிற்கு தரவில்லை என்பதை நான் சொல்வேன். அதேபோல NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மொத்த செலவினமாக அவர்கள் செய்திருப்பது--ரூ.27,986 கோடி தமிழ்நாட்டிற்கு NHAI-லிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு NHAI எவ்வளவு கொடுத்திருக்கிறது என்றால், ரூ.81,803 கோடி. தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு அதிகம். நான் இந்த வித்தியாசங்களை, ஏதோ நிதி ஒதுக்கீட்டிற்காக வரக்கூடிய வித்தியாசங்களாக, குறைபாடுகளாக சொல்லவில்லை. இது இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு அப்பட்டமான அரசியல் பாகுபாடு என்று நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. அதன் காரணமாக இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பாக இருக்க வேண்டுமென்று சொன்னால், இந்திய நாட்டிலே இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களும் சமமாக பார்க்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய அந்த நியாயமான பங்கும், வளர்ச்சிக்கான உரிமையும் திட்டமிட்டவாறு மறுக்கப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது என்பதுதான் என்னுடைய வாதமாகும்.

      அதேபோல, இரயில்வே திட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நெடுஞ்சாலை மட்டுமல்ல மாண்புமிகு முதல்வர் அவர்களும், தமிழ்நாடு அரசும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதிகளை தாருங்கள், புதிய இரயில்வே திட்டங்களைத் தாருங்கள் என்று நேரம் வாய்க்கிறபோதெல்லாம், சந்தர்ப்பம் வாய்க்கிறபோதேல்லாம், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பாரத பிரதமர் அவர்களிடத்திலேகூட பல்வேறு சமயங்களிலே தமிழ்நாட்டின் சார்பிலே கோரிக்கை மனுக்களை அளித்து, அவரை சந்திக்கிறபோதெல்லாம் அதை வலியுறுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக கோயம்புத்தூர்-கரூர், கோயம்புத்தூர்-கோபிசெட்டிப்பாளையம், பவானி-சேலம், மதுரை-வேலூர், இனாம்குளத்தூர் போன்று இருக்கக்கூடிய முக்கியமான பாதைகளுக்கு அனுமதியினை கேட்டு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல நேரங்களிலே வலியுறுத்தியிருக்கிறார்கள்.

      ஆனால், அந்தக் கோரிக்கைகள் ஒன்றிற்குக்கூட ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, பல மாவட்டங்களிலுள்ள பகுதிகளும் இந்த இரயில்வே இணைப்புகள் கிடைக்காமல் விலகியிருக்கக்கூடிய காரணத்தால், அந்த மாவட்டங்களுடைய வணிகம், தொழில் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரயில்வே திட்டங்களை நீங்கள் எடுத்துக்கொண்டாலும்கூட, மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மொத்த இரயில்வே நிதி 19,068 கோடி ரூபாய். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு 2025-2026 ஆம் நிதியாண்டில் மட்டும் 19,858 கோடி ரூபாய். அதாவது, 3 ஆண்டுகளில் நமக்கு வழங்கியது 19,068 கோடி ரூபாய்; ஆனால், இந்த 2025-2026 ஒரே நிதியாண்டில் மட்டும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 19,858 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக, மூன்றாண்டுகளில் நமக்கு வழங்கப்பட்ட தொகையானது, ஒரே ஆண்டில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு காட்டக்கூடிய பாகுபாட்டிற்கு இதுதான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இது நிதி ஒதுக்கீட்டில் இருக்கக்கூடிய பாகுபாடு மட்டுமல்ல; அரசியல்ரீதியாக நீங்கள் காட்டக்கூடிய பாகுபாட்டையும் இது சுட்டிக்காட்டுகிறது.

      அடுத்ததாக, உத்தரப் பிரதேசத்தில் 92,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 68 இரயில்வே திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 33,467 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 இரயில்வே திட்டங்கள்தான் இருக்கின்றன. அவர்கள், நம்மைவிட 3 மடங்கு அதிகமான இரயில்வே திட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். நேற்றைக்குக்கூட, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் பேசும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நீங்கள் பெற்றதைவிட, நாங்கள் அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். 2009-2014 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும், 2014-2024 ஆம் ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும் ஒப்பிடுகிறபோது, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சராசரி வருடாந்திர ஒதுக்கீடு 18 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வெறும் 6 மடங்காக மட்டுமே இருக்கிறது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, இந்தக் கூட்டாட்சி அமைப்பில் அனைத்து மாநிலங்களிலும் சமமான ஒரு வளர்ச்சி நிலையை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென்று நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

      அதேபோன்று, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உட்கட்டமைப்புத் திட்டங்களில் உருவாக்கியிருக்கக்கூடிய மகத்தானதொரு புரட்சி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம். ஆதி திராவிட மக்களுக்கு முதன்முதலாக கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுத்த பெருமை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. (மேசையைத் தட்டும் ஒலி) அவர்தான் 1970 ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கித் தந்தார்; 2010-ல் அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இவற்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 14 வருடங்களுக்குப் பிறகு அந்தத் திட்டத்திற்குப் புத்துயிரூட்டி மீண்டும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்கிற அந்தத் திட்டத்தை தன்னுடைய தந்தையினுடைய கனவை நிறைவேற்றக்கூடிய தனயனாக, (மேசையைத் தட்டும் ஒலி) இன்றைக்கு நாட்டு மக்களுக்கு, சராசரியாக இருக்கக்கூடியவர்களுக்கு, சாதாரண ஏழையெளிய மக்களுக்கு அவர்கள் குடியிருப்பதற்கு வீடு வழங்கக்கூடிய மகத்தான திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

      அதில், ஒரு வீடு கட்டுவதற்கு 3½ இலட்சம் ரூபாய் என்ற அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியையும்கூட நாம் ஒன்றிய அரசிடமிருந்து பெறவில்லை. முழுமையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தந்திருக்கிறார்கள். இதுவரை, இந்தத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாயில் 2,00,000 வீடுகளைக் கட்டுவதற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதில் ஒரு சாதனை நோக்கோடு 1 இலட்சம் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பதை நான் மிகுந்த பெருமையோடு சொல்வேன். (மேசையைத் தட்டும் ஒலி) அதில், மேலும் 74,000 வீடுகள் தற்போது கட்டுமானத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.

      அதேபோன்று, நகர்ப்புறங்களில் வீடுகளைக் கட்டுதல். நகர்ப்புறத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஏறத்தாழ 15 இலட்சம் ரூபாய் செலவாகக்கூடிய நிலை இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் என்ற நகர்ப்புறப் பகுதிகளுக்கான திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு என்பது வெறும் 1.5 இலட்சம் ரூபாய்தான். குறிப்பிட்ட வகையில் 15 இலட்சம் ரூபாயாவது செலவாகின்ற நிலையில், 1.5 இலட்சம் ரூபாயை மட்டும்தான், அதாவது 10 சதவிகித பங்கினைதான் ஒன்றிய அரசாங்கம் தருகிறது. இது மிக மிகக் குறைவான நிதி. ஆனால், மீதமிருக்கக்கூடிய நிதியை, சுமார் 90 சதவிகித கட்டுமானத்திற்கான நிதியை தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுத்துவிட்டாலும், நம்முடைய மக்களுக்கு அதற்கான நிதியை நம்முடைய சொந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், குடியிருப்பு என்பது மனிதன் வாழத் தேவையான ஓர் அடிப்படை உரிமை என்ற வகையில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருந்தன்மையோடு அந்த நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பெயர் என்பதோ வேறு. வேறு பெயர்களை நீங்கள் வைத்துக்கொள்கிறீர்கள்; அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழ்நாடு அரசைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு அரசு மக்களுடைய நலனுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால், ஒன்றிய அரசு பேர் வைப்பதிலே காட்டக்கூடிய ஆர்வத்தைப் பார்க்கிறபோது ‘நீங்கள் விளம்பர நோக்கத்திற்காக அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்’ என்பதை நான் சொல்லுவேன். எனவே எங்களைப் பொறுத்தமட்டில் மக்களுக்கான செயல் என்பதுதான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. புகழுக்காக அல்ல என்பதையும் நான் இங்கே திட்டவட்டடமாகச் சொல்வேன்.

அடுத்து, சமூக பொருளாதார அடிப்படையில் பார்த்தால், நம்முடைய அடிப்படையாகக் கீழே இருக்கக்கூடிய மக்களில் நாம் பார்க்கும்போது மாற்றுத் திறனாளிகள். அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய சமூக உதவித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழங்கக்கூடிய நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 200 ரூபாய், அதைப்போல முதியோர் ஓய்வூதியத்திற்காக அவர்கள் வழங்கக்கூடிய தொகை 200 ரூபாய், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கக்கூடிய தொகை எவ்வளவு தெரியுமா? 300 ரூபாய், முதியோருக்காக நீங்கள் கொடுக்கக்கூடியது 200 ரூபாய்; அதேபோல விதவைகள்-கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கு 300 ரூபாய். இதை நீங்கள் வழங்குவது தேசிய சமூக உதவித் திட்டத்தின்கீழ். ஆனால், இந்தத் தொகையை வைத்துக்கொண்டு எப்படி ஒருவர் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். எனவேதான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவர்களுடைய நிலையை உயர்த்த, இந்தத் தொகையை உயர்த்தி மாதம் இவர்களுக்கு 1,200 ரூபாய் என்று அவர்களுக்கு உயர்த்தித் தந்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) இதுதான் ஒரு மனிதநேயமிக்க அரசாங்கத்தினுடைய கருணையினுடைய வெளிப்பாடு எங்கே அமைந்திருக்கிறது என்று சொன்னால், எந்த இடத்தில் நம்முடைய கருணைப் பார்வை வரவேண்டும்; சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு அந்தக் கருணைப் பார்வை வர வேண்டும் என்கின்ற நோக்கில்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கடைக்கண் பார்வையும் கருணை நோக்கோடு இன்றைக்கு அவர்களுக்கு கைதூக்கிவிட்டிருக்கிறது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை நான் இங்கே உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதைப்போல ‘நிதிப் பகிர்விலே தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறது’ என்று நான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். அதனுடைய நிதிப் பகிர்வு விகிதம், 7 சதவிகிதம் 15-வது நிதிக் குழுவினால்--ஏற்கெனவே 9-வது நிதிக் குழுவில் 7 சதவிகிதமாக இருந்தது; ஆனால், 15-வது நிதிக் குழுவில் 4.079 சதவிகிதமாக அது குறைத்து நிர்ணயிக்கப்பட்ருக்கிறது. இதனால் நம்முடைய மாநிலத்திற்கு வரக்கூடிய அந்த நிதிப் பகிர்வு நிராகரிக்கப்பட்டிருக்கக்கூடிய அளவிற்கு ஏறத்தாழ 2.63 இலட்சம் கோடி ரூபாய் நமக்கு வர வேண்டிய அந்தத் தொகை, நமக்கு வராமல் ஒரு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நான் நேற்றைக்குக்கூட அதைச் சொன்னேன். நம்முடைய ஒட்டுமொத்தமாக நிலுவையில் இருக்கக்கூடிய கடன் தொகையில் இது 32 சதவிகிதமாக இருக்கும். இந்தப் பங்கு நமக்கு வந்திருந்தால் நம்முடைய கடனுடைய அளவு பெருமளவு குறைந்திருக்கும் அல்லது கடனேகூட வாங்க வேண்டிய சூழ்நிலைகள்கூட இல்லாமல் இருந்திருக்கும்.

அதேபால, ஒட்டுமொத்த நாட்டினுடைய மக்கள் தொகையில் தமிழ்நாடு 6.124 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறோம். ஆக, 6 சதவிகிதம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மாநிலம் வெறும் 4.0 சதவிகிதத்தை நாம் இன்றைக்கு நிதிப் பகிர்வாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மக்கள்தொகைக்கேற்ப இருக்கிறதா? இல்லை. அதைத்தான் அவர்கள் சொன்னார்கள், ‘நீங்கள் developed ஆகிவிட்டீர்கள்; நாங்கள் கொடுக்கமாட்டோம்’ என்று சொல்வதற்கு அதுதான் காரணம். மக்கள்தொகைப் பெருக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தினோம். இந்த நாட்டினுடைய சிறப்பான திட்டங்களை முன்னெடுத்தோம். நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கக்கூடிய அந்தக் காலகட்டத்தில் எழுபதுகளில் ஒரு தொலைநோக்குப் பார்வையோடு மக்கள்தொகையைக் குறைக்க வேண்டுமென்கிற அந்தத் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையோடு  நிறைவேற்றிய காரணத்தால் இன்றைக்கு தமிழ்நாடு நிதிப் பகிர்விலே வஞ்சிக்கப்படுகிறது.

அதுமாத்திரமல்ல, இந்த நாட்டிலேயே மிகக் குறைவான நிதிப் பங்கீட்டைப் பெறக்கூடிய மாநிலங்களில் ஹரியானா, மகாராஷ்டிரத்திற்குப் பிறகு தமிழ்நாடுதான் இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால் மத்தியப் பிரதேசம் ஒருங்கிணைந்திருக்கிறபோது அவர்கள் பெற்றிருக்கக்கூடிய வளர்ச்சி 48 சதவிகிதம். உத்தரப்பிரதேசம் 18 சதவிகிதம்; ஜார்க்கண்ட் எல்லாம் சேர்த்து பீகார் 15 சதவிகிதம்; கர்நாடகம் குறைவாக 18 சதவிகிதம்; ஆந்திரப் பிரதேசம் (-19) சதவிகிதம்; இவர்களுக்கெல்லாம் குறைவாகத்தான் வந்தது. ஆனால், தமிழ்நாட்டிற்கு எவ்வளவு குறைவு தெரியுமா? கொடுத்தது (-42) சதவிகிதம், தமிழ்நாட்டிற்குக் குறைந்திருக்கிறது. ஆக, இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால் கேரளாவும், நாமும் அதிலே ஒன்றாக இருக்கிறோம். மக்களுக்கான நலத் திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், அதற்காக நாம் வஞ்சிக்கப்பட்டு வந்திருப்பதற்கு இது நல்ல உதாரணம்.

நான் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன். 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குக் கொடுத்திருக்கக்கூடிய வரிப் பங்களிப்பு எவ்வளவு தெரியுமா? 7.5 இலட்சம் கோடி ரூபாய். 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில். ஆனால், இந்த 7.5 இலட்சம் கோடி ரூபாய் நாம் கொடுத்துவிட்டு, நமக்கு எவ்வளவு வரிப் பகிர்வாக வந்திருக்கிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக 2.85 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக வந்திருக்கிறது.

ஆனால் உத்தரப் பிரதேசம் எவ்வளவு கொடுத்தார்கள்? அவர்கள் கொடுத்தது வெறும் ரூ.3.07 இலட்சம் கோடி. ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுகூட வரவில்லை. அந்த நிதி, இந்த சட்டமன்றத்திற்கு வெளியே இன்றைக்குப் பெருமழையாகப் பெய்வதைப்போல, உத்தரப் பிரதேசத்தில் நிதி பெருமழையாக வந்து, 3 மடங்கு தொகையாக, ஏறத்தாழ ரூ.10.60 இலட்சம் கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்தது சுமார் 3 இலட்சம் கோடி. நம் ஊரில் சொல்வார்களே, எல்லோரும் சர சரவென்று போட்டு எடு, எடுத்ததில் எவ்வளவு ரூபாய் வருகிறதென்று பார்த்து அதிலே அடிக்கிறார்கள், gambling-ல்கூட இப்படி வரவில்லை. ஆனால், சுமார் 3 இலட்சம் கோடி ரூபாயைக் கொடுத்துவிட்டு, 10 இலட்சம் கோடி ரூபாயைப் பெறுகிறார்கள் என்று சொன்னால், இதுதான் இன்றைக்கு அப்பட்டமாக ஒன்றிய அரசு நமக்குச் செய்யக்கூடிய ஒரு மாபெரும் ஓரவஞ்சனை என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே, மிகுந்த பணிவன்போடு நான் சொல்வேன்.

தமிழ்நாட்டில் இத்தகைய நலத் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆட்சி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இருக்கிறது என்கின்ற காரணத்தால் (மேசையைத் தட்டும் ஒலி) எந்தக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அடுக்கடுக்கான கஷ்டங்களை எங்களுக்குத் தந்து, நிதியினைக் குறைத்து, strangulate செய்து, இதையெல்லாம் செய்வதன்மூலமாக தமிழ்நாட்டு அரசினை ஸ்தம்பிக்க வைத்துவிடலாம் என்ற பகல் கனவிலே, நீங்கள் என்னதான் செய்தாலும், எவ்வளவுதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், நான் மிகுந்த பணிவன்போடு சொல்ல விரும்புவது என்னவென்றால், பாவேந்தருடைய வரிகளை எடுத்துக் கொண்டு நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால்,

தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத்

தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப்போகும்! தூளாய்ப்போகும்!

எத்தனை தடைகள் இருந்தாலும். (மேசையைத் தட்டும் ஒலி) தடைக்கற்கள் உண்டென்று சொன்னாலும் அவற்றைக் கடந்துவிடுவோம் என்று சொல்லி, அதிலே சிறப்பாக செயல்படக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆட்சியின் சிறப்பை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்வார் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய உரையின் இறுதியாக, மீண்டும் நான் ஒன்றிய அரசை நோக்கி, இறுதியாக ஒரு 10 கேள்விகளை வைக்க விரும்புகிறேன்.

தலைநகர் டெல்லியின் செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களைப் பார்க்கும்போது, இதுநாள் வரை நாடெங்கும் உரத்த குரலிலே ஒலித்துக் கொண்டிருந்த Cooperative Federalism என்பது வெற்று முழக்கமா என்று ஒன்றிய அரசின் அதிகார பீடத்தில் இருக்கக்கூடியவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இது வெற்றுக்குரல் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

நாட்டிலேயே உயர் கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் அனைத்து வகைக் குறியீடுகளிலும் முதன்மை பெற்றுள்ள தமிழ்நாட்டின்மீது புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தித் திணிப்பை மீண்டும் கையில் எடுத்து, பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியையும், ஆசையையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்திடும் ஒன்றிய அரசின் செயல் என்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?

வாரா வாரம் நடைபெறும் ஒன்றிய அமைச்சரவைக் கூட்ட முடிவுகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை வழித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைப் பார்த்தால், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கூற்றினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா?

பரந்து விரிந்த இந்திய தேசத்தை ஒன்றிணைப்பதில் railway-ன் பங்கு மிக முக்கியமானது என்று வரலாற்றாசிரியர்கள்கூட கருதுகிறார்கள். ஆனால், புதிய இரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக railway-க்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து, கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய தமிழ்நாட்டு அரசினுடைய முன்மொழிவுகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 மாதங்களாக நீண்ட உறக்கத்திலே உறைந்துபோய் இருக்கிறதே, அதற்கு காரணம் என்ன? நியாயம்தானா? அதே நேரம், உத்தரப் பிரதேச மாநிலத்தில், தலைநகர் லக்னோ மாநகரம் தவிர, ஆக்ரா, கான்பூர், நொய்டா ஆகிய மாநகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றவே? அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் Mumbai-ஐ அடுத்து, Pune, Nagpur மாநகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறதே? உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இரண்டு மாநிலங்களை நான் சொல்கிறபோது, இயல்பாகவே உங்களுக்கு ஒரு கேள்வி எழும். உத்திரப் பிரதேசத்தைச் சொல்கிறார், மகாராஷ்டிராவைச் சொல்கிறார், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை ஏன் சொல்லவில்லையென்று. அந்த மாநிலம், இந்த மாநிலமாகத்தான் இருக்குமென்ற உங்களுடைய யூகத்தை நானும் யூகித்துக்கொள்கிறேன். எனவே, அந்த மாநிலம் சந்தேகத்திற்கிடமில்லாமல் குஜராத் மாநிலம். குஜராத் மாநிலத்தில் அதன் தலைநகர் அகமதாபாத் தவிர, சூரத் மாநகரத்தில் மெட்ரோ இரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தனை மாநிலங்களில், மாநிலத்தின் தலைநகரிலும், தலைநகரைத் தாண்டியுள்ள இடங்களிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கிறபோதுதான் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. கோவை மாநகரத்திற்குக் கேட்டோம். கோவை மாநகரம் என்பது தொழில்வளம் மிக்க ஒரு பகுதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த கோவை மாநகரத்தை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள்.

சரி, கோவை மாநகரத்தைத்தான் புறக்கணித்திருக்கிறீர்கள். ஆனால், மதுரை என்பது “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று சொல்லக்கூடிய அன்னை மீனாட்சியை அருள்பாலிக்கக்கூடிய ஆன்மிகத் தலமாக இருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரை இறையனாரும் முருகவேளும் இருந்து சங்கம் வளர்த்திருக்கக்கூடிய அந்த மதுரை என்பது, ஆன்மிக திருத்தலமாக, அன்னை மீனாட்சியினுடைய அருள்பாலிக்கும் தலமாக இருக்கக்கூடிய அந்த இடமான மதுரைக்குக்கூட நீங்கள் மெட்ரோ இரயிலைத் தருவதற்கு மறுக்கிறீர்களே, நான் கேட்க விரும்புவது என்னவென்றால், உங்களோடு இன்றைக்கு இணக்கமாக கூட்டணியில் இருக்கிறாரே, மதுரையிலிருந்து அண்ணன் திரு. செல்லூர் கே. ராஜூ அவர்கள் சினம்கொள்ள மாட்டார்களா? இதோ இருக்கிறாரே நம்முடைய திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் இதைக் கேட்டு, திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்களின் மனம் உடைந்துபோக மாட்டார்களா? அல்லது அங்கு இருக்கக்கூடிய—இன்று வரவில்லை, அண்ணன் திரு. வி.வி. ராஜன் செல்லப்பா அவர்கள். திரு. ராஜன் செல்லப்பா அவர்களைப் பார்த்து மதுரை மக்கள், “செல்லப்பா அவர்களே, இதைக் கொஞ்சம் சொல்லப்பா” என்று அவரைப் பார்த்து யாரும் கேட்கமாட்டார்களா? ஆக, அவர்களுக்கெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எங்களுக்காக இல்லையென்றாலும், உங்களோடு வந்திருக்கக்கூடிய, உங்களுடன் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கக்கூடிய மதுரை மாநகரத்திற்காகவாவது, உங்களுடைய கடைக்கண் பார்வை திரும்பி இருக்கிறது என்று சொன்னால், அது அங்கயற்கண்ணியினுடைய பார்வையே அதற்கு போதும், ஆளக்கூடியவர்களுடைய பார்வை தேவையில்லை என்ற முடிவிலே நீங்கள் இருக்கிறீர்களா என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

அதேபோல, நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டப்படும் வீடுகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதி 90 சதவிகிதம், ஒன்றிய அரசினுடைய பங்கு 10 சதவிகிதம் மட்டும். கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசின் பங்கு 30 சதவிகிதம் மட்டும். மீதம் தருவதெல்லாம் தமிழ்நாடு அரசுதான். இப்படி தமிழ்நாட்டின் நிதி மற்றும் தமிழர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கட்டப்படும் வீடுகளுக்கு மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களுடைய பெயரை நீங்கள் வைத்துக்கொள்கிறீர்கள். பரவாயில்லை. மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களுடைய பெயரை நீங்கள் வைத்துக்கொள்வதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், நாங்கள் கேட்பது என்னவென்றால், ஏன் அதற்கான உரிய நிதியை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறீர்கள்? 75 இலட்சம் கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கக்கூடிய வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ரூ.975 கோடியை இன்னும் தர மறுக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையின்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தையே சிதைப்பதுதான் உங்களுடைய நோக்கமா? தேசிய சமூக ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஓய்வூதியத்திற்காக ஒன்றிய அரசு வழங்கும் தொகை ரூ.200/- மட்டும். நான் குறிப்பிட்டு சொல்வது, விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுவது ரூ.300/- மட்டும். ஆனால், மக்கள் நலனைக் கருத்திலேகொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்குவது ரூ.1,200/- ஆகும். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் குடிசைகளில் வாழும் ஏழை குடும்பங்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படும் திட்டங்களுக்கு நிதியைக் குறைத்துவிட்டு, புரியாத மொழியில் மட்டும் நீட்டி முழக்கிபெயர் வைப்பதுதான் உங்களுக்கு வழக்கமா? நாடெங்கும் வாழும் மக்களுக்கு, தூய்மையான குடிநீரை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் இன்று வறண்டு கிடக்கிறது. தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி இன்னும் வரவில்லை. ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டிய ஒன்றிய அரசு, அவர்களுக்கு தண்ணீருக்கு பதில் கண்ணீரை பரிசளிப்பது முறையாக இருக்குமா? நாட்டு மக்களின் மக்கள்தொகையில் 6.1 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து 10 சதவிகிதத்தை அளித்துக்கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு, ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 4 சதவிகித நிதியைப் பெறுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு உகந்ததா?” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com