தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்- எடப்பாடி, கடமை வாயில்- அன்புமணி!
திருச்சி மண்டல இரயில்வே அலுவலகத்தின் பெயரைத் தமிழில் சூட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
”புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போதுஇந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.
இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்.
எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.ம.க.தலைவர் அன்புமணியோ, “ திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடர்வண்டித்துறையின் கோட்ட தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் தமிழ்நாட்டில் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு பெயர் சூட்டும் போது மாநில உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் திருச்சி கோட்ட தொடர்வண்டித்துறை தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு கடமை வாயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தன் சமூகஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
