ஒன்றிய அரசும் தில்லி அரசும் மெத்தனப்போக்கைக் கையாள்வது ஏன்?பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
”இந்தியாவின் இதயப் பகுதியான தில்லி மாநகரில், 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.” என்று அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”குறிப்பாக, காணாமல் போனவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் சிறுமிகளும் பெண்களும் என்பது நெஞ்சைப் பதற வைப்பதோடு, இந்திய பெருநிலத்தின் பாதுகாப்புத் தன்மையையே கேலிக்குள்ளாக்கி உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அன்றாடம் நடமாடும் தலைநகரில், சாமானியப் பெண்களுக்கு இந்த கதி ஏற்படுவது தேசத்திற்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகும்.
நாட்டின் உளவுத்துறையும், காவல்துறையும், உள்துறை அமைச்சகமும் எதற்காக இயங்குகின்றன என்கிற கேள்வி, இன்று ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கனன்று கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 52,000-க்கும் மேற்பட்டோர் தில்லியில் காணாமல் போய், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது என்பது பாதுகாப்பு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வியையே பறைசாற்றுகிறது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வெற்று முழக்கங்களை மட்டுமே முன்வைக்கும் ஒன்றிய அரசின் கண்காணிப்புகள் நிறைந்த தில்லியில், இந்த மனிதக் கடத்தல்களையும் குற்றங்களையும் தடுக்கத் தவறியது ஏன்?
ஒன்றிய அரசும், தில்லி அரசும் ஒருங்கிணைந்து, உடனடியாக பலமான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, காணாமல் போனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.