தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், சட்டப்பேரவையின் புதிய வளாகம் பட்டினப்பாக்கம் பகுதியில் அமைக்கப்படவிருப்பதாகப் பரவும் செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3 ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.
கடந்த 25 ஆண்டுகளாகவே புதிய தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும்.
சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன.
இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல.
மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டடமாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயணைப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உட்பட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இத்தனைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
முதலல்வரின் புதிய தலைமைச் செயலக கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து.
முதல்வர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றை சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.