தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தூசி மோகன்... அதிமுகவிலிருந்து நீக்கிய இபிஎஸ்!

தூசி மோகன்
தூசி மோகன்
Published on

தவெக கட்சியின் செய்யாறு தொகுதியின் வேட்பாளராக களமிறங்கும் அதிமுக மாவட்டச் செயலாளர் தூசி.கே.மோகனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 3 கட்டங்களாக வெளியானது. அதில் தூசி.மோகனுக்கு சீட் கொடுக்கவில்லை.

மேலும் கட்சியிலும் அவருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற அதிருப்தியில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் இன்றைய தினம் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார்.

அவ்வாறு இணைந்த தூசி கே.மோகனுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் 234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டார்.

தூசி மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் ஜோதி வென்றார். இதனால் 2026 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில் தூசி கே. மோகனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், சத்தியபாமா, செல்வம், ரெட்டியார்பட்டி நாராயணன், வி.எஸ்.பாபு, நிர்மல் குமார் உள்ளிட்டோர் வரிசையில் தூசி மோகனும் தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com