ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனரும் துரை வைகோவின் தாய்மாமாவுமான இராமானுஜம் முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் நேற்று காலமானார். அவரின் முகத்தைக் கடைசியாகக்கூட பார்க்கமுடியவில்லையே என துரை வைகோ உருக்கமாகக் கூறியுள்ளார்.
வைகோவுக்கும் சீமானுக்கும் ஒரு கட்டத்தில் பிரச்னை வந்தபோது, நாம் தமிழர் கட்சியினர் வைகோவைப் பற்றி காட்டமாகப் பேசியதைக் கேட்டு, இந்த இராமானுஜத்தின் மகன் சரவணசுரேஷ் உணர்ச்சிமேலிட தன்னைத்தானே தீயிலிட்டு மாய்த்துக்கொண்டார். அந்தத் துயர நிகழ்வை துரை இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
துரை வைகோவின் இரங்கல் செய்தி:
“ என் அன்பு மாமா எ.ராமானுஜம் அவர்கள் மறைந்தார்!
பிறப்பும் இறப்பும் சேர்ந்ததே வாழ்வு என்றாலும், ஒருவரின் இழப்பில் அவருடனான அன்பும், பழகிய பாசமும், வாழ்ந்த வாழ்வும், அவரின் உயர்ந்த குண நலன்களும் கண்முன் வந்து மனதை நிறைக்கும்.அப்படியான நினைவுகளை நினைத்துப்பார்க்கிறேன்.
என் தாயார் ரேணுகா அம்மாவின் உடன் பிறந்த இரண்டாவது அண்ணன். நம் இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்களின் மைத்துனர். என் தாய்மாமா ராமானுஜம் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று 11.11.2024 மறைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் வசித்துவந்தவர். தலைவர் மீதும் அவருடைய அரசியல் மீதும் தீராத பற்றுடையவராகவும், தலைவருக்கு உற்ற உறுதுணையாகவும் கடந்த 60 ஆண்டுகாலமாக வாழ்ந்தார். தலைவரின் ஆரம்ப கால அரசியலிலும், கட்சி தொடங்கிய பிறகும், தன்னுடைய இறப்புவரையிலும் அந்த நிலையிலிருந்து கொஞ்சமும் விலகாதவர்.
அவரது மகன்களும், அவரது குடும்பமும் தலைவர் மீது மரியாதை கொண்டவர்களாகவும், தலைவர் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று உளமாற விரும்பியவர்களாகவுமே இருந்தார்கள். அதிலும் அவர் மகன் தியாகி சரவணசுரேஷ் அவர்கள் தலைவர் மீது அன்புநெறி பாசவெறி கொண்டிருந்தார். அவர், தலைவர் பங்கேற்கும் தென்மாவட்ட கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கக்கூடியவராகவும், அனைத்து நடைபயணங்கள், ஆர்ப்பாட்டக்களங்களில் பங்கேற்றவர். ஒவ்வொரு தேர்தல் களங்களிலும் முன்வரிசை தொண்டராக களத்தில் நிற்பவர். ஒருபோதும் மேடைகளிலோ, புகைப்படங்களிலோ தன்னை முன்னிருத்திக்கொள்ளாதவர்.
அப்படிப்பட்ட தன் மகன் சரவணசுரேஷ், தலைவரை சில அயோக்கியர்கள் கொச்சைப்படுத்தியதற்காக மனமுடைந்தவராக, தன் மேனியில் தீவைத்து மாண்டுபோனபோதும், தன் மகன் இழந்த துயரில் கூட அரசியல் மீதோ தலைவர் மீதோ வெறுப்புணர்வு வந்துவிடாதவாறு கூடுதல் அன்பை பொழிந்தவர் என் மாமா ராமானுஜம் அவர்கள். கட்சி தலைவர் நலனே அனைத்திலும் முக்கியம் என்று தன் மகன் இழப்பிழும் உறுதியோடு நின்றவர் மாமா ராமானுஜம்.
ஆரம்பக் காலகட்டத்தில் பருத்தி வியாபாரத்தில் கோலாச்சியவர். 1960களில் தென்மாவட்ட கிராமங்களில் கார்களை பார்ப்பதே அதிசயம். ஆனால் அப்போதே ஆஸ்ட்டின் காரை வைத்திருந்தவர் தான் மாமா இராமானுஜம் அவர்கள். வியாபாரத்திலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குடன் வாழ்ந்தவர். அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தின் வரதராஜ முதலாளியுடன், சென்-ஜான்ஸ் பள்ளி பருவக்காலம் தொட்டு நெருங்கிய நண்பராக இருந்தவர்.
கண்ணியமானவர். ஒருதடவை கூட அதிர்ந்து பேசாதவர் என்ற அளவிற்கு மிகவும் மென்மையின் உருவானவர். இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடுபார்க்காதவர். நல்ல குண நலன்கள் நிறைந்த பண்பான மனிதர். அவருடைய இறப்பு என் தாயார் ரேணுகா அம்மா அவர்களுக்கு பேரிழப்பு ஆகும்.
கடந்த வாரம் நடந்த என் மகளின் திருமணத்திற்கு, அவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலாமல் போய்விட்டது.
அவரின் இறப்பு செய்தி அறிந்த நேற்று, என் மகள் மறுவீடு செல்லும் நிகழ்வால் துக்கவீட்டிற்கு செல்ல முடியவில்லை; தலைவருக்கு சில மாதங்களுக்கு முன் தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் தலைவர் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், என் அம்மாவும் இறப்பு வீட்டில் இருப்பதால் இன்றும் என்னால் அங்கு சென்று மாமாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
கடைசியாக என் மாமா ராமானுஜம் அவர்களின் முகத்தை காண முடியாத, அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத சூழ்நிலை என் மனதை பெரிதும் வாட்டுகிறது.
நாளை மறுநாள் 14 ஆம் தேதி இயக்கத்தோழரின் திருமணத்தை நடத்திவைக்க மதுரை செல்ல உள்ளதால், அப்படியே என் மாமா இல்லத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
தாங்க முடியாத மன வேதனையுடன், கழகத்தின் சார்பாகவும், தலைவரின் சார்பாகவும் என் ஆழ்ந்த இரங்கலை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.